Tuesday, April 1, 2008

சே குவேரா - ‘‘உன் முன் நடக்கும் அக்கிரமங்களைக் கண்டு உன் ரத்தம் கொதிக்குமென்றால், நீ என் தோழன்!’’


விடுதலை வேட்கை கொந்தளிக்கும் ஒரு தேசத்தின் வெறுமனே காற்றில் ஆடும் ஒரு போராளியின் குண்டு துளைத்த சட்டை, விலைமதிப்பற்றது. அது காணும் எண்ணற்ற இதயங்களில் புரட்சியின் விதைகளைத் தூவிச் செல்லும். சே குவேராவின் திறந்த விழிகளும் அங்கே அப்படித்தான் இருந்தன!
தென் கிழக்கு பொலிவியாவின் வாலேகிராண்டேவில், ஒரு பள்ளிக்கூட வளாகத்தில், 1967, அக்டோபர் 9&ம் தேதியன்று குண்டுகளால் துளைக்கப்பட்ட சேகுவேராவின் உடல் கிடத்தப்பட்டது. திறந்துகிடந்த அவரது விழிகளில் இரண்டு நட்சத் திரங்கள் இடையறாது மின்னுவதைப்போல உணர்ந்ததாகச் சொன்னார்கள். தான் இங்கே விதையாகக் கிடத்தப்பட்டுள்ளோம் என்ற அவரது பேருணர்வின் மிச்ச ஒளியாகக்கூட அது இருந்திருக் கலாம்!
இன்றும் பெருநகரச் சாலைகளில் எதிர்ப்படும் ஏராளமான இளைஞர்களின் டி&ஷர்ட்களின்
மூலமாக உலகின் எல்லா மூலை முடுக்குகளிலும் ‘சே’ என்று அழைக்கப்படும் சேகுவேராவைத் தரிசிக்கிறது உலகம்!
யார் இந்த இளைஞர்கள்? சேகுவேராவைப் பற்றி இவர்களுக்கு என்ன தெரியும்?
சேகுவேராவின் முகம் பதித்த ஆடைகளை அணிவதன் மூலம் இவர்கள் என்ன உணர்வைப் பெறுகிறார்கள்? தன் தினசரிச் செலவுகளில் பெரும் சதவிகிதத்தை அமெரிக்காவுக்கு ஒப்புக்கொடுக்கும் இன்றைய நவீன இளைஞர்களின் செயல்பாடுகளுக்கு முற்றிலும்எதிரானது அல்லவா சேகுவேராவின் எண்ணமும் உணர்வும்?
இந்த வரலாற்று முரண்நகைகூட ஒரு வகையில் சேகுவேராவின் வெற்றியே! எந்த நாடு அவரை முற்றா கத் தீர்த்துக்கட்டியதாக நினைத்ததோ, அதே தேசத்தில் எண்ணற்ற போஸ்டர்களிலும், டி&ஷர்ட்களிலும், சாவிக் கொத்துகளிலும், காபிக் கோப்பைகளிலும் அவரை அச்சடிக்கவைத்து, உலகம் முழுக்கக் கொண்டாடப்படும் ஒருவனை நம்மால் வேறு எப்படிக் கணிக்க முடியும்?
1928, ஜூன் 16... தென் அமெரிக்கக் கண்டத்தின் பணக்கார நாடான அர்ஜென்டினாவில், ரொசாரியோ எனும் நகரில், ஒரு வீட்டின் கூரைகளில் சிறிய மின்விளக்குகள் மினுங்கின. அப்போதுதான் பிறந்த ஒரு ஆண் குழந்தையின் சத்தமும் சந்தோஷச் சிரிப்பொலி களும் அந்த வீட்டிலிருந்து கேட்டன. ஸ்பானிய & ஐரிஷ் இனத் தம்பதிக்கு அன்று ஒரு தலைமகன் பிறந்தான்.நிலவுடைமை வம்சத்தைச் சேர்ந்த அந்தத் தம்பதியினர், தங்களது இருவரின் பெயரையும் இணைத்து ஒரு தொடர்வண்டி ரயில் போல நீளமாக ‘எர்னஸ்டோ குவேரா டி லா செர்னா’ எனப் பெயரிட்டனர். ஆனால், பின்னாட்களில் கியூபா மக்களின் பாச மொழியில் சகா, தோழன் எனப் பொருள்படும் வகையில், ‘சே’ என ஒற்றைச் சொல்லில் அவர் கம்பீரமாகவிளிக்கப்பட்டதே வரலாறு!

‘சே’வுக்கு இரண்டு வயது இருக்கும். நீச்சல் ஈடுபாடு கொண்ட அவரது தாய் செலியா, ஒரு குளிர் காலைப்பொழுதில் நதிக்கு தன் குழந்தையைக்குளிப்பாட்ட அழைத்துச் சென்றார். நடுக்கமூட்டும் குளிர் நதியில் தன் குழந்தையை அவர் நீராடவைக்க, ஈர உடையில் கிடுகிடுத்துக்கிடந்த குழந்தையின்நுரையீரலை நிமோனியா நோய் தாக்கி, ஆஸ்துமா அவரை இறுகப்பற்றியது.
வாழ்நாள் முழுக்க அந்த நோய் சேகுவேராவை உருக்குலைத்தது.பின்னாளில் போர்க் காலங்களில், காடுகளிலும் மலைகளிலும் சுற்றித் திரிந்தபோது ஆஸ்துமாவால் அவர் பட்ட வேதனைகள் கொஞ்ச நெஞ்சம் அல்ல. வேறொரு வகையில் சேகுவேராவுக்கு ஆஸ்துமா ஒரு பரிசு என்று கூடக் கருதலாம். உளவியல்ரீதியாகப் பார்க்கும்போது, சிறு வயதிலேயே பீடித்த அந்தக் கொடிய நோயின் மனவாதையிலிருந்து தன்னைக் காத்துக்கொள்ளும் விதமாகவே, அசாத்திய வீரனாகவும் கட்டற்றஆற்றல் கொண்டவராகவும் தன்னைக் கற்பனை செய்யத் தூண்டியிருக்குமோ அது என்று தோன்றுகிறது. ஏனெனில், ‘சே’வின் எல்லாத் தகுதிகளுக்கும் பின்னாலிருந்து செயல்படுத்தியது அவரது உடலிலிருந்தும் மனதிலிருந்தும் பீறிட்ட அந்தக் கட்டற்ற ஆற்றல்தான்.
அதுதான் சிறுவயதில் முரட்டுத்தனமான ரக்பி விளையாட்டில் அவரை ஈடுபடுத்தியது. ஆடுகளத்தில் பின்னிருந்து ஆடும் தடுப்பாட்டக்காரனின் நிலையிலேயே பெரும்பாலும் விளையாடுவார் ‘சே.’ பிற்காலத்தில் தான் மேற்கொண்ட கெரில்லா யுத்த காலங்களில், எதிரிகளைத் தன்னிச்சையாக செயல்படவைத்து, அவர்கள் வலுவிழக்கும் தருணத்தில் கண்மூடித்தனமாகத் தாக்கி முற்றாக நிலை குலையவைக்கும் தந்திரத்துக்கு இந்த விளையாட்டே அவருக்குப் பெரும் முன்னோட்டமோ!

சிறுவயதிலிருந்தே அவருக்குப் பிடித்தமான மற்றொரு விளையாட்டான சதுரங்கமும், எதிரிகளை வீழ்த்தும் இதே தந்திரங்களைக் கொண்டுஇருந்தது ஆச்சர்யமான ஒன்று. பிற்காலத்தில் போர்க்களத்துக்குத் தேவையான மன இயக்கத்தை, சிறுவயதிலிருந்தே அவருக்கே தெரியாமல் அவருக்கான சூழல்கள் உருவாக்கித் தந்திருக்கின்றன.
அக்கால கட்டங்களில் ‘சே’வின் தந்தை எர்னஸ்டோ கட்டடங்களைக் கட்டித் தரும் தொழிலில் ஈடுபட்டு இருந்தார். இதனால் அவரது வீட்டைச் சுற்றி எண்ணற்ற கூலித் தொழிலாளிகளின் ஏழை வீடுகள் இருந்தன. அவை, அட்டைகளாலும் தகரங்களாலும் நிர்மாணிக்கப்பட்ட குடிசைகள். அந்த வீடுகளில் இருந்த குழந்தைகள்தான் ‘சே’வின் விளையாட்டுத் தோழர்கள். ‘சே’விடம் இயல்பாகவே ஒரு தலைமைப் பண்பு உருவாகிவந்தது. எந்தக் கவலையும் இல்லாமல் அவர்களுடன் விளையாடிப் பொழுதைக் கழிப்பார் ‘சே’. மாலையில் மீண்டும் தன் பணக்கார வீட்டுக்குத் திரும்பியதும், பகல் முழுக்கப் பார்த்த ஏழைச் சிறுவர்களின் வாழ்வை தன் வீட்டுச் சூழலுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் கேள்விகள் முளைத்தன. அந்த ஏழைக் குழந்தைகளின் வாழ்வு நிலை அவரைச் சங்கடப்படுத்தியது. தனக்கும் அவர்களுக்குமான இடைவெளிக்கான காரணம் என்ன, அதை எப்படி நம்மால் சமப்படுத்த முடியும் என்பது குறித்து அந்தப் பிஞ்சு இதயம் யோசித்திருக்கக்கூடும். இப்படியெல்லாம் சிந்தனை வயப்பட்ட ஒருவரால் மட்டுமே அதற்கான விளக்கவுரை எழுத, பின்னாட்களில் தன் வாழ்க்கையையே அர்ப்பணிக்க முடியும்.
கல்வியைப் பொறுத்தவரை கணிதம் மற்றும் ஆங்கிலத்தில் மிகச் சாதாரண மனிதராகவே இருந்தார் ‘சே’. இசையும் நடனமும் இன்னும் மோசமாக அவரது திறமைக் குறைவை அவருக்கு உணர்த்தியது. மாறாக, இலக்கியமும் வரலாறும் அளவுக்கதிமாக வசீகரித்தன. நோபல் பரிசு பெற்ற இலக்கியங்களை சிறு பருவத்திலேயே தேடிப்பிடித்து வாசிக்க ஆரம்பித்தார்.
அப்போதே கவிதை எழுதுவதில் ஆர்வமுடையவராக இருந்தார். வளரிளம் பருவத்தில் பாப்லோ நெருடாவின் வார்த்தை அலைகள், ‘சே’வின் இதயத்தை மிகவும் பரவசப்படுத்தின. நெருடாவின் பெரும்பாலான கவிதைகளை மனப்பாடமாக ஒப்பிக்கும் அளவுக்கு ஈடுபாடு. ஜாக் லாண்டன், எமிலியோ சல்காரி, ஜூல்ஸ் வெர்ன், சிக்மண்ட் ஃப்ராய்ட், பெர்ட்ராண்ட் ரஸ்ஸல் போன்றவர்களைத் தன் கல்லூரி படிப்பின் துவக்க நாட்களுக்குள்ளாகவே வாசித்திருந்தார். எழுத்தாளராக வேண்டும் என்ற கனவு அவரிடம் கனன்றுகொண்டு இருந்ததால், தன்னைச் சுற்றியுள்ள அனைத்தையும் தொகுப்பாக்கி, பின் பகுத்துப் பார்க்கும் தன்மையும் அவரிடம் இருந்தது. பிறப்பில் ஐரோப்பிய ஸ்பானிய இனத்தைச் சேர்ந்தவராக இருந்ததால், ‘சே’வின் நடவடிக்கை களில் ஒரு கட்டுப்பாடும் ஒழுக்கமும் இருந்தன. புரட்சியாளராக அவர் பின்னாளில் உருவெடுத்த போது கட்டற்ற ஆற்றலைக் கட்டுப்படுத்தி திட்டமான ஒரு பாதையில் அவரை நெறிப்படுத்த, இது பெரிதும் உதவியாக இருந்தது.
பள்ளிப் படிப்பை முடித்த பிறகு, மருத்துவப் படிப்பை ‘சே’ தேர்ந்தெடுத்ததற்குப் பல காரணங்கள் உண்டு. தன் பாட்டி இறப்பதற்குக் காரணமாக இருந்த புற்றுநோய்க்கு மாற்று கண்டு பிடிக்கும் பொருட்டு மருத்துவம் பயின்றார் என்பதும் அவற்றில் ஒன்று.
தனது மருத்துவப் படிப்பு காலத்தில் ‘சே’ வசீகரத்தின் வசந்தத்தில் இருந்தார். கைகளை விரித்து உற்சாகக் குரல் எழுப்பி நண்பர்களிடம் நாயகனாக வலம் வந்தார். அப்போது அவரின் மேல் புரட்சியின் எந்த சிறுநிழலும் விழுந்திருக்கவில்லை. புத்தக வாசிப்பு, நண்பர்கள், விளையாட்டு என அவரது உலகம் உல்லாசமாக இருந்தது.
தன் நண்பர்களைச் சந்திக்க, ஃப்யூனஸ் அயர்ஸிலிருந்து 78 கி.மீ தொலைவில் இருந்த கோர்டோபா எனும் நகரத்துக்கு அடிக்கடி பயணித்தார். அக்காலங்களில் அவரது வசீகரம், உயர் அழுத்த மின்சாரம் போல பெண்களின் இதயங்களைப் படபடக்கவைத்தது. கொச்சையான சிரிப்பும், கட்டற்ற சுதந்திரத்தைப் பறைசாற்றும் பின் தள்ளப்பட்ட கேசமும், அசிரத்தையான உடைகளும், அதிகாரத் தைக் கேலி செய்யும் பாவனைகளுமாக எதற்கும் வசப்படாத வித்தியாசமான தோற்றத்தில் வலம் வந்தார் ‘சே’! இருந்தும், இறந்தும் பெற்ற எல்லாப் பெருமைகளுக்கும், அவரது இந்தக் கட்டற்ற வசீகரமும் ஒரு காரணம். புறத் தோற்றத்தைத் தாண்டி அவரது கண்ணில் பிரகாசித்த ஒளிக்கு அவரது ஆன்ம விசாலமே காரணமாக இருந்தது.
1960 மார்ச் 5&ம் தேதி, ஹவானாவின் வீர மரணம் அடைந்த போர் வீரர்களுக்கான ஓர் அஞ்சலிக் கூட்டத்தில் கலந்து கொண்டபோது ஆல்பர்ட்டோ கோர்டா (கிறீதீமீக்ஷீtஷீ ளீஷீக்ஷீபீணீ) என்பவர் எதேச்சையாக எடுத்த ‘சே’வின் புகைப்படம் பின்னாளில் 20&ம் நூற்றாண்டை அடையாளப் படுத்தும் மிகச் சிறந்த புகைப்படமாகத் தேர்ந் தெடுக்கப்பட்டது ஒன்றே இதற்குச் சான்று!
1951&ல் மருத்துவப் படிப்பு இன்னும் முழுமையாக முடிந்திராத தறுவாயில் ‘சே’வுக்கும் அவரது நண்பர் உயிர் வேதியியல் மாணவர் ஆல்பர்ட்டோ கிரனாடோவுக்கும் ஒரு வித்தியாசமான ஆசை தோன்றியது. தென் அமெரிக்கக் கண்டம் முழுக்க மோட்டார் சைக்கிளில் சுற்றிப் பார்க்க வேண்டுமென்ற ஆசை!
அதுதான் உலகத்தின் மிக உன்னதமான ‘மோட்டார் சைக்கிள் டைரி’!

நண்பர் ஆல்பர்ட்டோ கிரனாடோவுடன் ‘சே’ மோட்டார் சைக்கிள் பயணம் புறப்பட்டார். இருவரின் விருப்பத்துக்கும் பின்புலமாக இருந்து தூண்டியது அவர்களின் மருத்துவப் படிப்பு.
தென் அமெரிக்கா முழுக்கத் தொழுநோய் பீடித்தி ருந்த காலம். அது குறித்து ஆய்வு செய்யவும், அதற்குத் தங்களால் எதுவும் மருந்து கண்டுபிடிக்க முடியுமா என்ற தேடலுமே அந்தப் பயணத்துக்கான ஆரம்பம்.
சித்தார்த்தன், புத்தன் ஆன கதை போல பயணம்தான் ‘சே’வின் பாதைகளைத் தீர்மானிக்கும் ஆரம்பமாகவும் இருந்தது. வெவ்வேறான நிலப்பரப்புகளிடையே பய ணித்து தங்களது கலாசார அறிவை வளர்த்துக்கொள் வதற்கும் அது உதவும் என்று அவர்கள் நினைத்தனர். 500 சிசி நார்டன் மோட்டார் சைக்கிளில், சொற்ப ஆடை களும், மனது நிறையத் தன்னம்பிக்கையுமாக, 1951 டிசம்பர் 29&ல் புறப்பட்ட அந்தப் பயணம், ‘சே’வின் வாழ்க்கையைத் திசை திருப்பியது.
அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க பயணக் குறிப்புகள் தான், ‘மோட்டார் சைக்கிள் டைரி’ என்ற பெயரில் உடன் பயணித்த கிரனாடோவால் எழுதப்பட்ட பிரபல புத்தகம்.
அப்போது ‘சே’வுக்கு வயது 23. தோழர் கிரனாடோவுக்கு 29. இளமையின் காற்று தழுவிக்கொண்டு இருந்த ஒரு குளிர் இரவில், துவங்கியது பயணம்.
காலத்தை உணர்தல் என்பது அறிவின் மூலமாக நிகழ்வதன்று, அது புலன்களின் வழியாக உணர்வது. 23 வயதில் மோட் டார் சைக்கிளில் ஏறக்குறைய 10,000 கி.மீ. பயணம் செய்யும் அவரது துணிச்சல் நமக்கு இதைத்தான் கற்றுத் தருகிறது. எண்ணற்ற மலைகள், நதிகள், வனங்கள், பாலைவனங்கள் இவற்றினூடே நிகழ்ந்த அந்தப் பயணம் பல்வேறான அனுபவங்களைக்கொண்டு இருந்தது.
உழைப்பாளிகள், உழைப்பைச் சுரண்டு பவர்கள், தொழு நோயாளிகள், காவலர்கள், அறிவுஜீவிகள், முட்டாள்கள், அடிவருடிகள், பண முதலைகள், பராரிகள், திருடர்கள் மற்றும் எண்ணற்ற காதலிகள் என வெவ் வேறான மனிதர்களையும் அனுபவங்களை யும் தந்த அந்தப் பயணத்தில் ‘சே’வினுடைய ஆஸ்துமாவும் தன் பங்குக்கு அவரைப் பெரிதும் இம்சித்தது.
சிலி, பெரு, கொலம்பியா என நீண்ட அந்தப் பயணம் ஏறக்குறைய ஆறு மாதங் களைக் கடந்திருந்தது. தொழுநோயாளிகளின் தங்குமிடங்களைத் தேடித் தேடிச் சென்று, அவர்களின் தோளில் கை போட்டு உண்டு, உறங்கி, கால் பந்தாடிய ‘சே’வின் உள்ளத்தில் பலவிதமான உணர்ச்சிப் பேரலைகள்!
இறுதியாக 1952, ஜூலை மாதம் அந்த நெடிய பயணம் முடிவுக்கு வந்தபோது, ‘சே’ முழுவதுமாக மாறியிருந்தார். தென் அமெரிக்கக் கண்டம் முழுவதும் மக்களின் ஏழ்மை, பிணி, அறியாமை, வர்க்க வேறுபாடுகளுக்குக் காரணமாக அமெரிக்காவும் அவர்களது சி.ஐ.ஏ. உளவு நிறுவனமும் செயல்படுவதை அறிந்தார். லத்தீன் அமெரிக்க நாடுகளில் சமூக, பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் அனைத்துக்கும் வாஷிங்டனும் அதன் முதலாளித்துவமும் மட்டுமே காரண மாகக் கண்டறிந்தார்.
சுற்றுப்பயணம் முடிந்ததும், மனம் முழுக்க வேதனைகளைச் சுமந்தவராக அர்ஜென்டினா திரும்பினார். ஒருவித குற்ற உணர்ச்சியில் பீடிக்கப்பட்டவராக இருந்தார் ‘சே’.
1953&ம் ஆண்டு மருத்துவப் பட்டம் பெற்றதும், சே அங்கிருக்கப் பிடிக் காமல், ஒரு நண்பரின் ஆலோசனை யில்பேரில், குவேதமாலாவுக்குப் பணி நிமித்தம் சென்றார். ஏற்கெனவே அவருக் குள் உருவாகியிருந்த அமெரிக்கா மீதான கோபத்தை குவேதமாலாவின் அரசியல் சூழல் அதிகப்படுத்தியது. அப்போது குவேதமாலாவை ஆண்டு கொண்டு இருந்த அர்பான்சோ என்னும் கம்யூனிஸ்ட் ஆதரவு அரசைக் கவிழ்க்க, அமெரிக்கா தன் சி.ஐ.ஏ. மூலமாக தீவிரமாகச் செயல்பட்ட தருணம். ‘சே’, அங்கிருந்த கம்யூ னிஸ்ட்களுடன் தன்னை இணைத் துக்கொண்டு, அமெரிக்காவுக்கு எதி ரான வேலைகளில் ஈடுபடத் தொடங் கினார். ஆனால், அமெரிக்கா தனது எண்ணத்தைச் சுலபமாக நிறை வேற்றி ஜேக்கப் அர்பான்சோ அரசைக் கவிழ்த்தது.

இக்காலகட்டங்களில் கம்யூ னிஸ்ட்களிடம் நெருங்கிப் பழகிய ‘சே’, மார்க்ஸிய லெனினியப் பாதை தான் தனது பாதை என்பதை உணர்ந் தார். அது குறித்த ஆய்வுகளையும் அவர் மேற்கொண்டார். விவசாயி களிடம் குவேதமாலா அரசு, ஆயுதங் களைக் கொடுத்துப் போராட்டத்தில் ஈடுபடச் செய்திருந்தால் அமெரிக்கா வின் சதியை முறியடித்திருக்கலாம் எனும் பார்வையில், ‘சே’ கட்டுரைகள் எழுதினார். இதனால் சி.ஐ.ஏ&வின் பார்வைக்கு இலக்கானார். பாது காப்புக்காக அர்ஜென்டினா தூத ரகத்தில் தங்க நேரிட்டது.
இச்சமயத்தில், அவரது எண்ணங் களால் ஒரு கியூபா போராளி வசீகரிக் கப்பட்டார். அவர் பெயர் நிக்கோ லோபஸ். கியூபாவின் ஜனாதிபதியாக இருந்த ஃபொலோன் சியோ பாடிஸ்ட் டாவின் சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக ஃபிடல் காஸ்ட்ரோவின் தலைமையில் ஒரு புரட்சி ஏற்படுத்திய ‘ஜூலை 26’ எனும் இயக்கம் அப்போதுதான் தோல்வியைச் சந்தித்திருந்தது. காஸ்ட்ரோ சிறை பிடிக்கப்பட்டு, பின் மன்னிப்பின் பேரில் விடுதலை செய்யப்பட்டு இருந்தார்.
நிக்கோலோபஸ§க்கு, குவேத மாலாவில் ‘சே’வைச் சந்தித்தபோது புத்துணர்ச்சி ஏற்பட்டது. வரலாற்றுச் சிறப்புமிக்க சில யோசனைகள் அவரது எண்ணத்தில் பளிச்சிட்டன. சித்தாந்தங்களில் தேர்ச்சி பெற்றிருந்த சே குவேரா மட்டும் கியூபா புரட்சி யில் பங்கெடுத்தால், போராட்டத்துக்கு ஒரு புது வடிவம் கிடைக்கும் என்று லோபஸ் நம்பினார். இது குறித்து காஸ்ட்ரோவின் சகோதரர் ரால் காஸ்ட்ரோவுடன் பேசினார்.

1955, ஜூலை மாதம், ஒரு குளிர்ந்த இரவில் மெக்ஸிகோ நகரத்தின் வீதியன்றில் மரியோ ஆன்டோ னியோ என்பவரின் வீட்டு முன் வந்து நின்ற காரிலிருந்து, பின்னாளில் புகழ்மிக்க தலைவராக உருவெடுத்த ஃபிடல் காஸ்ட்ரோ தன் சகோதர ருடன் இறங்கினார். வீட்டினுள்ளே அவர்களுக்காகக் காத்திருந்த சே குவேரா எனும் 27 வயது இளைஞன் தன் வாழ்க்கையையே மாற்றப்போகும் ஒரு கைகுலுக்கலுக்காக காத்திருந்தார்.
அடுத்த சில நொடிகளில் அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சம்பவம் நிகழ்ந்தது.
சேகுவேராவும் ஃபிடல் காஸ்ட்ரோ வும் வெவ்வேறு துருவங்கள். காஸ்ட் ரோவுக்கு போர்க்குணமும் போராட வேண்டிய அவசியமும் இருந்தது. ஆனால், போராட்டத்துக்கு வேண்டிய தத்துவப் பின்புலன் இல்லை. ‘சே’வுக்கு தத்துவமாக கம்யூனிஸம் உறைந்திருந்தது. ஆனால் போராடக் களம் இல்லை. இருவரும் இணைந்த போது... சக்திகள் இடம் மாறின!


கியூபா... குட்டித் தீவு. வட அமெரிக்காவுக்குக் கீழே கரிபியக் கடல்வெளியில், கரும்புக்காடாக விரிந்துகிடக்கும் அழகு தேசம்.
பூர்வகுடிகளாக செவ்விந்தியர்கள் வாழ்ந்த மண்ணில், வந்து விழுந்தான் கொலம்பஸ். புதிதாக ஒரு நாட்டைக் கண்டு பிடித்துவிட்ட உற்சாக வெறி! ஆயிரக்கணக்கான ஸ்பானிய வீரர்கள், பூர்வகுடிகளை கூட்டம் கூட்டமாக வெட்டிச் சாய்த்தனர். எஞ்சியவர்களை அடிமையாக்கினர். பிற்பாடு, ஸ்பானியர்கள் கூட்டம்கூட்டமாக கியூபாவில் குடியேறினர். கிட்டத்தட்ட தென் அமெரிக்கக் கண்டம் முழுவதும் ஸ்பானிய அமெரிக்கா எனக் குறிப்பிடும் அளவுக்குக் குடியேற்றம் நிகழ்ந்தது. கியூபாவின் வளத்தை ஸ்பானிய அரசு அட்டை போல் உறிஞ்சத் தொடங்கியது. இந்த அடிமை வாழ்வில் அவ்வப்போது புரட்சியின் தீப்பொறிகள் தோன்றி மறைந்தன.
1890&ல் ‘ஹொஸே மார்த்தி’ எனும் கவிஞனின் தலைமையில் பூர்வகுடிகள் அணி திரண்டனர். புரட்சி துவங்கிய வேகத்திலேயே, ஸ்பானிய அரசு ஹொஸேவைச் சுட்டுக்கொன்று, புரட்சியை வலுவிழக்கச் செய்தது. ஆனால், மக்களின் நெஞ்சங் களில் அந்த நெருப்பு மட்டும் அணை யாமல் இருந்தது. புரட்சியாளர்களுக்கு அமெரிக்கா உதவி செய்ய, ஸ்பானிஷ் & அமெரிக்க
யுத்தம் தொடங்கியது. 1902&ல் ஸ்பானிய அரசு விரட்டியடிக்கப்பட்டது. திருவாளர் நல்லவராக வந்த அமெரிக் காவோ, கியூபாவில் ஒரு மாற்று ஆட்சியை ஏற்படுத்தி, அதன் பொருளாதாரத்தை உறிஞ்ச ஆரம்பித்தது. கடைசியாக கியூபாவை ஆண்ட ஃபெலன்சியா பாடிஸ்டா ஆட்சியில், இது உச்சக்கட்டமாக நிகழ்ந் தது. மக்கள் மீண்டும் கிளர்ந்தெழுந்தனர். ஃபிடல் காஸ்ட்ரோ அவர்களின் பிரதிநிதி யாக உருவெடுத்தார். அதே வேகத்தில், காஸ்ட்ரோ கைது செய்யப்பட்டார். இது புரட்சிக் கனவுகளுக்குப் பேரிடி! ஆயினும், பாடிஸ்டா அரசின் மீதான எதிர்ப்பு காட்டுத் தீயாகப் பரவியது. எங்கே மக்கள் ஒன்றுசேர்ந்து புரட்சி நிகழ்ந்துவிடுமோ என்ற அச்சம்கொண்ட பாடிஸ்டா அரசு, ஒரு மன்னிப் பின் பேரில் காஸ்ட்ரோவை விடுதலை செய்தது.
பலமிழந்த சிங்கமாக காஸ்ட்ரோ வெளியே வந்தார். உடன் போராளிகள் இல்லை. ஆயுதங் கள் இல்லை. அடுத்து என்ன? புரட்சியின் கனவுக்கு முடிவுரை எழுதப்பட்டுவிட்டதா?
பலப்பல கேள்விகள் அவரது வானத்தில் வல்லூறுகளாய்ப் பறந்தன. இந்தக் குழப்பமான சூழ்நிலையில்தான் ‘சே’ & காஸ்ட்ரோ சந்திப்பு!
ஒரு மகத்தான வீரனை தனக்குள் இணைத்துக் கொண்ட தருணத்திலிருந்து கியூபா அரசியலில் எவருக்கும் அறியாத பரிணாம மாற்றங்கள் நிகழத்துவங்கின. வரைபடங்கள் விரிக்கப்பட்டன. புரட்சிக்கான திட்டங்கள் வரையறுக்கப்பட்டன.
பயிற்சி முழுவதுமாக முடிவடைந்த வீரர்கள் முழுமையாக கெரில்லாக்களாக மாறியிருந்தனர். புரட்சிக்கான நாள் குறிக்கப்பட்டது. இம்முறை காஸ்ட்ரோவின் கண்களில் நம்பிக்கை ஒளி தெரிந்தது. தனது கனவுகளை நிறைவேற்ற காலம் ஒரு மகத்தான வீரனைப் பரிசளித்திருக்கிறது எனும் நம்பிக்கை.
அப்போது ‘சே’வுக்கு வயது 27. காஸ்ட்ரோவுக்கு 32. காஸ்ட்ரோவுக்காவது கியூபா தன் சொந்த நாடு. போராடிய வேண்டிய அவசியம் இயல்பானது. ஆனால் ‘சே’வுக்கு அப்படி அல்ல. தனக்கு முற்றிலும் தொடர்பற்ற மற்றொரு தேசத்தில், அம்மக்களின் விடுதலைக்காகத் தன் உயிரைப் பணயம் வைத்து ஆயுதம் எடுப்பதென்பது, உலக வரலாற்றில் எப்போதும் எங்கும் நிகழ்ந் திராத ஒன்று. இதனால்தான் ‘சே’ மனிதருள் மாமனிதராக அடையாளம் காணப்பட்டார்.
‘கால்கள்தான் என் உலகம்’ என ‘சே’ ஒருமுறை தன் நண்பர் ஆல்பர்ட்டோவிடம் கூறியிருந்தார். ‘என் கால்கள் பதியக்கூடிய பெருவெளி அனைத்தும் எனது! அதில் வாழும் அனைவரும் என் சகோதரர்கள்’ எனும் பேருண்மையை அர்த்தப்படுத்தும் வாசகம் இது. இதனால்தான் காஸ்ட்ரோவிடம், ‘கியூபாவுக்கு விடுதலை கிடைக்கும் வரைதான் நான் உங்களுடன் இருப்பேன். அதன்பின் நான் என் பயணத்தைத் தொடர்ந்து, வெவ் வேறு இடங்களுக்குச் சென்றுவிடுவேன்’ என அழுத்தமாகக் கூறியிருந்தார் ‘சே’. காஸ்ட் ரோவும் அதற்கு ஒப்புக்கொண்டார்.
ஏறக்குறைய ஒன்றரை வருட கடுமையான ஆயுதப் பயிற்சிக்குப் பிறகு 1956, நவம்பர் 26&ம் தேதி இரவு மெக்ஸிகோ கடற்கரையில், 82 போராளிகள் ஒருவர் பின் ஒருவராக ஏறிக்கொண்டபின், விடுதலையின் பாடலை முழங்கியபடி, கிரான்மா எனும் படகு கியூபாவை நோக்கிப் பயணித்தது.
1957, ஜனவரி 17&ம் தேதி, தளபதி லா பிளாட்டோ கொல்லப்பட்டதன் மூலம் புரட்சியாளர்களின் முதல் வெற்றிச் சங்கொலி கியூபாவில் எதிரொலித்தது. அன்று துவங்கி மூன்றாண்டுகள் தொடர்ச்சியாக நடந்தது கெரில்லா யுத்தம். துவக்கத்தில் குழுவில் மருத்து வராகவும் லெஃப்டினென்ட்டாகவும் இடம்பெற்ற ‘சே’, தன் திறமை, துணிச்சல், மதிநுட்பம் ஆகியவற்றால் காஸ்ட்ரோவுக்கு அடுத்த நிலையிலிருந்து படைகளை வழி நடத்தினார். அவரது திறமை கண்டு வியந்த சக கியூபா வீரர் கள் அவரை பிரியத்துடன் ‘சே’ என அழைத்தனர். கடுமை யான ஆஸ்துமா துன்புறுத் தியபோதிலும், அடர்வனங் களிலும் மலைகளிலும் சளைக்காமல் வீரர்களுக்குத் தெம்பூட்டியபடி படையை வழி நடத்தினார் ‘சே’. ‘‘சாவைப் பற்றி எனக்குக் கவலை இல்லை. என் பின்னால் வரும் தோழர்கள் என் துப்பாக்கியை எடுத்துக் கொள்வார்கள். தோட்டாக்கள் தொடர்ந்து சீறும்’’ போன்ற அவரது வாசகங்கள், களத்தில் வீரர்களுக்கு மில்லியன் மெகா வாட் மின்சாரத்தைப் பாய்ச்சி சீற்றம் கொள்ளவைத்தன. யுவேராவில் நடைபெற்ற யுத்தத்தில், 53 ராணுவத்தினரை வெறும் 18 கெரில் லாக்களைக் கொண்டு வீழ்த்தியதுதான் ‘சே’வின் வீரத்தை கியூபாவுக்கு வெளிச்சமிட்டது. பின் தொடர்ந்த ஆண்டுகளில் வெவ்வேறு நிலைகளில் புரட்சிப்படை, பாடிஸ்டா அரசை முழுவதுமாக விரட்டியடித்தது.
1958 ஆகஸ்ட் மாதத்தில், புரட்சிப் படை தலைநகர் ஹவானாவுக்குள் ஊடுருவியது. கியூபா முழுவதும் காஸ்ட்ரோவின் வசமானது. வரலாற் றுச் சிறப்புமிக்க இந்தக் கெரில்லா யுத்த வெற்றி, உலகின் அனைத்து நாடு களையும் வியப்பில் ஆழ்த் தியது. ‘டைம்’ இதழ் ‘சே’ அட்டைப்படத்துடன் ‘புரட்சி யின் மூளை’யென கட்டுரை எழுதியது.
1959, பிப்ரவரி 16&ல் கியூபாவின் பிரதமராக காஸ்ட்ரோ பதவியேற்றவுடன், விவசாயத் துறையில் தேசியத் தலைவராக நியமிக்கப்பட்டார் ‘சே’. தேசிய வங்கியின் தலைவராக கியூபா ரூபாய் நோட்டுகளில் ‘சே’ என கையெ ழுத்திடும் அளவுக்கு முக்கியத்துவம் பெற்றார். பின் தொழிற்துறை அமைச் சராகவும் ‘சே’ பதவி வகித்தார். இருந்தாலும் ‘சே’ தன்னை ஒரு சாதாரணக் குடிமகனாகவே அடையாளம் காட்டிக் கொண்டார். விவசாயக் கூலிகளுடன் சேர்ந்து கரும்பு வெட்டுவதும், தொழிற் சாலைகளில் இதர பணியாளர்களுடன் சேர்ந்து மூட்டை சுமப்பதுமாகவே வாழ்ந்தார். ‘சே’ மற்றும் காஸ்ட்ரோ இருவருக்குமிடையே யுத்தத்துக்கு முன்பும் பின்புமான உறவுகளில் வேறுபாடுகள் இருந்தது என்றாலும், ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்ததில்லை.

அமெரிக்க ஏகாதிபத்தியத்தை மூன்றாம் உலக நாடுகளின் பிரதிநிதி யாக, ஒற்றை மனிதனாகத் தன்னால் வேரறுக்க முடியும் என ‘சே’ திடமாக நம்பினார். கியூபாவுக்கு ஏவுகணைகள் இறக்குமதி செய்ய ரஷ்யா வாக்குறுதி தந்தபோது, ‘‘ரஷ்ய ஏவுகணைகள் கியூபாவில் இறங்கினால் அது முதலில் அமெரிக்க நகரங்களையே குறிவைக்கும்’’ எனத் தைரியமாகக் குரல் கொடுத்தார். அமெரிக்கா, கியூபாவின் மீது விதித்த பொருளாதாரத் தடைதான் அவரது இந்தக் கட்டற்ற கோபத்துக்குக் காரணம்.
அமெரிக்காவின் சி.பி.என். தொலைக்காட்சி, ஒரு நேர்காணலுக்காக சேகுவேராவை நியூயார்க்குக்கு அழைத் தது. ‘‘அமெரிக்கா ஒரு கழுதைப் புலி. அதன் ஏகாதிபத்தியத்தை நான் வேரறுப் பேன்’’ என அமெரிக்க மண்ணிலேயே துணிச்சலாகப் பேட்டி தந்தார் ‘சே’.
சே குவேராவுக்கு முடிவுரை எழுதக் களத்தில் இறங்கியது அமெரிக்க உளவு நிறுவனமான சி.ஐ.ஏ!


உலகின் ஏதோ ஒரு மூலையில் யாரோ ஒரு மனிதன் சுடப்பட்டு கீழே விழுவான். அவனை யார், எங்கிருந்து, எதற்காகச் சுட்டார்கள் என எதுவும் தெரியாது. ஆனால், அவனைச் சுட்ட துப்பாக்கியின் மிச்ச புகை, அமெரிக்காவில் கசியும். உலக வரைபடத்தில் இந்த ஓநாயின் காலடி படாத இடமே இல்லை.
‘சே’வின் அமெரிக்கப் பயணமும், அமெரிக்க எதிர்ப்புப் பேச்சும் சி.ஐ.ஏ&வுக்கு சினமூட்டின. அதுவரை காஸ்ட்ரோவை குறிவைத்து இயங்கிய சி.ஐ.ஏ. தன் முழு எரிச்சலையும் ‘சே’வின் பக்கம் திருப்பியது. காஸ்ட்ரோவைக் காட்டிலும் ‘சே’தான் மிகவும் ஆபத்தானவர் என இலக்கு தீர்மானிக்கப்பட்டது.
விழும் இடமெல்லாம் விதைபோல விழுவதும், எழும் இடமெல்லாம் மலை போல எழுவதுமாக இருந்த ‘சே’, சதித் திட்டம் குறித்து அறிந்தும் புன்னகைத்தார். தொடர்ந்து சீனாவுக்கும் அல்ஜீரியாவுக்குமாக தன் பயணங்களைத் தொடங்கினார். சென்ற
இடங்களிலெல்லாம் அமெரிக்காவைக் கடுமையாகத் தாக்கிப் பேசினார். ரஷ்யாவையும் ஒரு பிடி பிடித்தார். அமெரிக்காவால் பாதிக்கப்படும் மூன்றாம் உலகக் குட்டி நாடுகளுக்கு ரஷ்யா பொருளா- தாரரீதியாகப் பாதுகாப்-பளிக்க வேண்டி-யது அதன் தார்மிகக் கடமை என முழங்கினார். தொடர்ந்து தான்சானியா, கானா, காங்கோ போன்ற ஆப்பிரிக்க நாடுகளுக்கும் பயணம் தொடர்ந்தது.
அமெரிக்க ஏகாதிபத்தியத்தாலும் அடக்குமுறை சர்வாதி-காரத்தாலும் ஆப்பிரிக்க மக்கள் அவதிப்படுவதை நேரடியாக உணர்ந்தார். குறிப்பாக காங்கோவின் அரசியல் சூழல், அவரை மிகவும் பாதித்தது. மக்கள் புரட்சிக்கு ஏதாவது செய்தாக வேண்டும் என்ற எண்ணம் எழுந்தது.
மூன்று மாத & கியூபா அரசால் அங்கீ-கரிக்கப்படாத &பயணத்துக்குப் பிறகு, ‘சே’ 1965 மார்ச்சில் கியூபா திரும்பினார். விமான நிலையத்தில் அவரை ஃபிடல் காஸ்ட்ரோ கை குலுக்கி வரவேற்றார். அதுதான் வெளியுலகுக்கு ‘சே’ நேரடியாக வெளிப்பட்ட கடைசி நிகழ்வு. அதன் பிறகு ‘சே’வைக் காணவில்லை. எங்கே போனார் என யாருக்கும் தெரியவில்லை.
அன்றிரவு ஒரு சந்திப்பில், காஸ்ட் ரோவின் தம்பி ரால் காஸ்ட்ரோ, ‘சே’வை டிராஸ்கியிஸ்ட் என சுடு சொல்லால் அழைத்ததாகவும், அது ‘சே’வின் மனதை மிகவும் காயப் படுத்தியதாகவும், அதுதான் ‘சே’ கியூபாவை விட்டு வெளியே செல்லக் காரணம் என்றும் சொல்லப் படுவதுண்டு.

‘சே எங்கே?’ & பத்திரிகைகள் அலறின. அனைவரது பார்வையும் காஸ்ட்ரோ பக்கம் திரும்பியது. ‘சே’வை சுட்டுக் -கொன்றுவிட்டார் காஸ்ட்ரோ எனுமளவு கோபம் கிளம்பியது. காஸ்ட்ரோவின் மௌனம் சந்தேகத்தை மேலும் அதிகப்படுத்தியது.
சே &காஸ்ட்ரோ இருவருக்கு-மிடையே கருத்து வேறுபாடுகள் நிலவியது உண்மை. அடிப்படை-யில் ‘சே’ ஒரு யதார்த்தவாதி. உள்ளது உள்ளபடியே போட்டு உடைக்கிற செயல் புயல். காஸ்ட்ரோ ஒரு ராஜதந்திரி. அரசியல்பூர்வமாகக் காய்களை நகர்த்துபவர். ‘யாதும் ஊரே, யாவரும் கேளிர்’ என்பது ‘சே’வின் உலகம். ஆனால், கியூபாவையும் அதன் மக்களையும் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு காஸ்ட்ரோவுக்கு. இருவருக்கு மிடையிலான முரண்கள் அனைத்துக்கும் இந்த வேறுபாடுகளே அடிப்படை!
உண்மையில் ‘சே’ அப்போது காஸ்ட்ரோவுக்கும், அவரது தாய்க்-கும் ஒரு கடிதத்தை எழுதி அனுப்பி-விட்டு தனது அடுத்த புரட்சிக்காக காங்கோ கிளம்பி இருந்தார். காஸ்ட்ரோ எவ்வளவோ முயற்சித்தும் ‘சே’வை நிறுத்த முடியவில்லை. ‘மக்களுக்கான பணியில் தனது பாதை தொடர்ந்து நீளும். அதனை ஒருபோதும் தடுக்கக் கூடாது’ என ‘சே’ காஸ்ட்ரோவிடம் உறுதிமொழி வாங்கியிருந்ததும் அதற்கு ஒரு காரணம்.
‘சே எங்கே?’ எனக் கேட்ட யாருக்கும் காஸ்ட்ரோவால் வெளிப்படையாக பதில் சொல்ல முடியவில்லை. காரணம், சி.ஐ.ஏ!
‘சே’வை அழித்தொழிக்கத் தேடி வரும் சி.ஐ.ஏ&வுக்கு துப்பு கிடைத்துவிடக்கூடும் என காஸ்ட்ரோ அஞ்சியதே காரணம். வியட்நாமுக்கு ‘சே’ சென்று விட்டதாக காஸ்ட்ரோ சொன் னதை நம்பி, வியட்நாம் காடுகளில் ‘சே’வை சி.ஐ.ஏ தேடி அலைந்து ஏமாற்றமும் எரிச்சலும் அடைந்தது. அந்தக் கடுப்பில், ’சே’வை காஸ்ட்ரோ சுட்டுக் கொன்றதற்கு தங்களிடம் ஆதா ரங்கள் இருப்பதாகப் பொய்ச் செய்தியைப் பரப்பத் தொடங்கியது. இது காஸ்ட்ரோவுக்கு மிகவும் நெருக்கடியை உருவாக்க, வேறு வழி இல்லாமல் அக்டோபர் 3, 1965&ல், பொதுமக்கள் முன்னிலையில் ‘சே’ தனக்கு எழுதிய கடிதத்தை அவரது அனுமதியுடன் பகிரங்கமாக வெளியிட்டார் காஸ்ட்ரோ. கடிதத்தில் ‘சே’ கியூபாவை விட்டு தான் வெளியேறியதற்கான காரணத்தையும், காங்கோ புரட்சிக்குச் செல்வதையும் குறிப்பிட்டி ருந்தார்.
‘சே’, காங்கோ காடுகளில் துப்பாக்கியுடன் களத்தில் இருந்தார். கியூபா வீரர்கள் மற்றும் கறுப்பினப் போராளிகளுடன் காங்கோவின் சர்வாதிகார அரசை வேரறுக்கும் பணியில் இறங்கியிருந்தார். ஆனால் அவர் நினைத்ததுபோல், அந்த புரட்சி ‘சே’வுக்கு வெற்றி தேடித் தரவில்லை. காங்கோ நாட்குறிப்புகள் எனும் டைரியில் எழுதியிருந்தது போல, அது ஒரு தோல்வியின் வரலாறாக முடிந்தது.
அமெரிக்க சி.ஐ.ஏ. கழுகுகள் அவரைத் தேடி காங்கோ காடுகளுக்குள் புகுந்தபோது, ‘சே’ தன் பட்டாளத்துடன் செக்கோஸ் லோவியாவுக்கு இடம்பெயர்ந் திருந்தார்.
‘சே’வுக்கு மீண்டும் கியூபா செல்ல விருப்பம் இல்லை. பொலிவிய மாவோயிஸ்ட் தலைவரான மோஞ்சேவின் அழைப் பின் பேரில், தன் அடுத்த இலக்கான பொலிவியாவுக்குள் 1966 இறுதிவாக்கில் மாறுவேடத்தில் நுழைந்தார். அவருடன் 50 பேர் கொண்ட கெரில்லாப் படையும் புனிதப் பணியில் ஈடுபட்டது. ஆனால், அங்கேயும் அவருக்கு காங்கோவைப் போல தோல்வியே காத்திருந்தது.
தட்பவெப்ப சூழ்நிலைகளின் முரண், கலாசாரப் புரிதலின்மை போன்றவையே அவரது திட்டங்களின் தோல்விகளுக்குக் காரணம். இன்னொரு பக்கம் அவர் யார் யாரை தன் அரசியல் நண்பர்களாக நம்பி இருந்தாரோ, அவர்கள் யாரும் உதவி செய்யாமல், மௌனமாகக் கைகட்டி வேடிக்கை பார்த்ததும் தோல்விக்கான முக்கியமான காரணங்களில் ஒன்று. இந்த மனவேதனையுடன் ஆஸ்துமாவும் சேர்ந்து ‘சே’வை வாட்டி வதைத்தது. போதிய வீரர்கள் இல்லாதது மற்றும் உணவின்மை போன்ற பிரச்னைகளுடன் ‘சே’ காடுகளில் அலைந்தார். சி.ஐ.ஏ. பொலிவியாவுக்குள்ளும் புகுந்தது. ஃபெலிக்ஸ் ரோட்ரிக்ஸ் என்பவர் தலைமையில் வேட்டையாடத் தொடங்கியது.
1967 அக்டோபர் 8.... தென் அமெரிக்கச் சரித்திரத்தில் ஓர் இருண்ட தினம்.
காலை 10.30... யூரோ கணவாயை ஆறு கெரில்லா வீரர்களுடன் ‘சே’ கடந்து செல்கிறார். வழியில் தென்பட்ட ஆடு மேய்க்கும் குண்டுப் பெண்ணின் மேல் பரிதாபப்பட்டு ஐம்பது பெஸோக்களைப் பரிசாகத் தருகிறார்.
நண்பகல் 1.30... அந்தக் குண்டுப் பெண் பொலிவிய ராணுவத்துக்கு ‘சே’வின் இருப்பிடத்தைக் காட்டிக் கொடுக்கிறாள். அலறிப் புடைத்துப் பறந்து வந்த பொலிவிய ராணுவம் சுற்றி வளைத்துச் சரமாரியாகச் சுடத் தொடங்குகிறது. பதிலுக்கு கெரில்லாக்களும் துப்பாக்கியால் சுடுகின்றனர்.
பிற்பகல் 3.30... காலில் குண்டடிபட்ட நிலையில், தன்னைச் சுற்றித் துப்பாக்கியுடன் சூழ்ந்த பொலிவிய ராணுவத்திடம், ‘‘நான்தான் ‘சே’. நான் இறப்பதைக் காட்டிலும், உயிருடன் பிடிப்பது உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும்’’ என்கிறார்.



மாலை 5.30... அருகிலிருந்த லா ஹிகுவேராவுக்கு வீரர்கள் கைத்தாங்கலாக ‘சே’வை அழைத்து வருகின்றனர். அங்கிருக்கும் பழைய பள்ளிக்கூடம் ஒன்றில் ‘சே’ கைகால்கள் கட்டப்பட்ட நிலையில் சிறைவைக்கப்படுகிறார். இரவு 7.00... ‘சே பிடிபட்டார்’ என சி.ஐ.ஏ&வுக்குத் தகவல் பறக்கிறது. அதே சமயம், ‘சே’ உயிருடன் இருக்கும் போதே இறந்துவிட்டதாகப் பொய்யான தகவல் பொலிவிய ராணுவத்தால் பரப்பப்படுகிறது.
தனக்கு உணவு வழங்க வந்த பள்ளி ஆசிரியையிடம், ‘‘இது என்ன இடம்?’’ என்று ‘சே’ கேட்கிறார். பள்ளிக்கூடம் என அந்தப் பெண் கூற, ‘‘பள்ளிக்கூடமா... ஏன் இத்தனை அழுக்காக இருக்கிறது?’’ என வருத்தப்படுகிறார். சாவின் விளிம்பிலும் ‘சே’வின் இதயத்தை எண்ணி அப்பெண் வியந்து போகிறார்.
அக்டோபர் 9... அதிகாலை 6.00... லா ஹிகுவேராவின் பள்ளிக்கூட வளாகத்தில் ஒரு ஹெலிகாப்டர் வட்டமடித்தபடி வந்து இறங்குகிறது. அதிலிருந்து சக்திவாய்ந்த ரேடியோ மற்றும் கேமராக்களுடன் ஃபெலிக்ஸ் ரோட்ரிக்ஸ் எனும் சி.ஐ.ஏ. உளவாளி இறங்குகிறார்.
கசங்கிய பச்சைக் காகிதம் போல கைகால்கள் கட்டப்பட்ட நிலையில், அழுக்கடைந்த ஆடைகளுடன் ‘சே’வைப் பார்த்ததும், அவருக்கு அதிர்ச்சி. அமெரிக்காவுக்குச் சிம்ம சொப்பனமாக இருந்த ஒரு மாவீரனா இந்தக் கோலத்தில் இங்கே நாம் காண்பது என அவருக்கு வியப்பும் திகைப்பும்! பிடிபட்டிருப்பது ‘சே’தான் என அமெரிக்காவுக்குத் தகவல் பறக் கிறது. ‘சே’வின் டைரிகள் மற்றும் உடைமைகள் கைப்பற்றப்படுகின்றன. தான் கொண்டுவந்த கேமராவில் ‘சே’வை பல கோணங்களில் புகைப் படங்கள் எடுக்கிறார் ஃபெலிக்ஸ். கைவிடப்பட்ட ஏசு கிறிஸ்துவைப் போலக் காட்சி தரும் ‘சே’வின் அப் புகைப்படங்கள் இன்றளவும் வரலாற்றின் மிச்சங்கள்.
காலை 10.00... ‘சே’வை உயிருடன் வைத்துக்கொண்டு விசாரணை நடத்தினால், அது உலகம் முழுக்க அவர் மேல் பரிதாபத்தையும், நாயகத் தன்மையையும் உருவாக்கிவிடும் என்பதால், அவரை உடனடியாகத் தீர்த்துக்கட்டி விடுவதுதான் சரி என சி.ஐ.ஏ&விடம் இருந்து தகவல் வருகிறது.
வாலேகிராண்டாவில் இருந்து வந்த அத்தகவல் 500, 600 எனக் குறிச்சொற்கள் தாங்கி வருகிறது. 500 என்றால் ‘சே’... 600 என்றால் கொல் என்பவை அதன் அர்த்தங்கள்.
காலை 11.00... ‘சே’வைச் சுட்டுக் கொல்வது என முடிவெடுக்கப்படுகிறது. யார் அதைச் செய்வது எனக் கேள்வி வருகிறது. ‘மரியோ ஜேமி’ என்னும் பொலிவிய ராணுவ சர்ஜன் அக்காரியத்துக்காகப் பணியமர்த்தப்படுகிறார்.
நண்பகல் 1.00... கைகள் கட்டப்பட்ட நிலையில், ‘சே’வை பள்ளிக்கூடத்தின் மற்றொரு தனியிடத்துக்கு மரியோ அழைத்துச் செல்கிறார். ‘‘முட்டி போட்டு உயிர் வாழ்வதைவிட நின்று கொண்டே சாவது எவ்வளவோ மேல்!’’ என்பார் ‘சே’. ஆனால், மரியோ அவரை ஒரு கோழையைப் போலக் கொல்லத் தயாராகிறார். தன்னை நிற்க வைத்துச் சுடுமாறு ‘சே’ கேட்க, அதை அலட்சியப்படுத்துகிறார். ‘‘கோழையே, சுடு! நீ சுடுவது ‘சே’வை அல்ல; ஒரு சாதாரண மனிதனைத்தான்!’’ & இதயம் கிழிக்கும் விழிகள் மின்ன, உலகம் புகழும் மனிதன் சொன்ன கடைசி வாசகம் இதுதான்!
மணி 1.10... மனித குல விடுதலைக்காகத் தன் வாழ்நாளெல்லாம் போராடிய மாமனிதனை நோக்கி துப்பாக்கி திறக்கிறது. ஆறு தோட்டாக்களில் ஒன்று, அவரது இதயத்துக்குள் ஊடுருவியது. இனம், மொழி, தேசம் என எல்லைகள் கடந்து பாடுபட்ட உலகின் ஒரே வீரன் இதோ விடை பெறுகிறான்.
‘சே’ இறந்த தகவல் உலகத்தை உலுக்கியது.
அக்டோபர் 18.... கியூபா... ஹவானா-வில் வரலாறு காணாத கூட்டம் ‘சே’வின் அஞ்சலிக்காக காஸ்ட்ரோவின் தலைமையில் கூடியிருந்தது. அவர்கள் முன் தலைமை உரையாற்றுகிறார் காஸ்ட்ரோ. ‘‘வரலாற்றின் மகத்தான பக்கங்களில் இடம்பெற்றுவிட்ட ‘சே’ நம் காலத்தின் ஒப்பற்ற தலைவர். கியூபா மக்கள் அந்த மகத்தான தலைவனை முன்மாதிரியாகக் கொண்டு செயல்பட வேண்டும்’’ என வேண்டுகோள் விடுக்கிறார்.

இறந்தபோது ‘சே’வுக்கு வயது 40. உலகம் முழுக்க ‘சே’வின் புகழ் இன்னும் இன்னும் பரவியது. உலகின் அனைத்து இதழ்களிலும் ‘சே’ குறித்துக் கட்டுரைகள் எழுதப்பட்டன. உலகின் பெரும் கவிகளான ஆக்-டோவியா பாஸ், ஹ¨லியா கொத்சார் போன்றவர்கள் ‘சே’ குறித்து கவிதைகள் எழுதினர். பிரெஞ்சு அறிஞர் ழான் போல் சார்த்தர், ‘பூமியில் வந்துபோன முழுமையான மாமனிதர் சே!’ என மகுடம் சூட்டினார்.
நிகரகுவாவில் புரட்சி ஏற்பட்டு குவேராயிசம் எனும் கொள்கைகொண்ட சான்டனி ஸ்டாஸ் அரசு, ஆட்சியைக் கைப்பற்றியது. அதன் வெற்றி ஊர்வலத்தின்போது ஏசுவைப் போன்ற ‘சே’வின் உருவம் கொண்ட அட்டைகளை அனைவரும் தாங்கிப் பிடித்தி ருந்தனர்.
கியூபா அரசாங்கம் ‘சே’வின் நினைவைத் தொடர்ந்து சமூகத்தின் ஞாபகத்தில் பதியவைக்கும் விதமாக தனது கட்டடங்கள் மற்றும் பூங்காக்களில் சித்திரங்களாகவும், சிலைகளா கவும், பல்வேறு உருவ வேலைப்பாடு களாகவும் நிர்மாணித்து பெருமைப்படுத் தியது. சான்டா கிளாரா எனும் நகரில் ‘சே’வின் மியூஸியம் ஒன்றும் உள்ளது. வருடந்தோறும் மில்லியன் கணக்கில் பயணிகள் வெளிநாடுகளிலிருந்து இந்த மியூஸியத்தைப் பார்ப்பதற்காக மட்டுமே கியூபாவுக்கு வந்து செல்கின்றனர்.
கியூபாவில் இப்போதும் ஒரு வழக்கம் உண்டு. அதிகாலைகளில் வகுப்பறைகளுக்குச் செல்லும் முன், அத்தனை குழந்தைகளும் ஒருமித்த குரலில் முழங்குகிற வாசகம் என்ன தெரியுமா?
‘‘ஆம், எங்களது முன்னோர்கள் கம்யூனிஸ்ட்டுகளாக இருந்தனர். நாங்கள் ‘சே’வைப் போல இருப்போம்!’’


‘‘உன் முன் நடக்கும் அக்கிரமங்களைக் கண்டு உன் ரத்தம் கொதிக்குமென்றால், நீ என் தோழன்!’’ இதுதான் சே குவேரா!




Courtesy: Vikatan

No comments: