Wednesday, October 8, 2008

தசாவதாரம் - சாரு நிவேதிதாவிற்கு ஓர் எதிர்வினைக் கடிதம்

உயிர்மையில் வந்த சாரு நிவேதிதாவின் கமலின் தசாவதாரம் பற்றிய விமர்சனம் 


உலக நாயகனே , இதுதான் உலக சினிமாவா ?

இந்த உலகத்திலேயே அழகான ஆடையை உங்களுக்குத் தைத்துத் தருகிறேன் என்று ஒரு மன்னனிடம் சொன்னான் ஒரு தையல்காரன். அளவெடுக்கிறேன் என்று அலப்பறை வேறு. ' இந்த விசேஷமான ஆடை உண்மை பேசுபவர்களின் கண்களுக்கு மட்டுமே தெரியும் ; மற்றவர்களுக்குத் தெரியாது ' என்று ஒரு ' பிட் ' டையும் பரப்பி விட்டான். நகர்வல நாளும் வந்தது. ' உடை மாட்டி விடுகிறேன் ' என்று சும்மாக்காச்சுக்கும் பாவனை பண்ணினான். மன்னனுக்கோ தனது நிர்வாணத்தைக் கண்டு கூச்சம். ஆனால் அதை வெளியே சொன்னால் எங்கே தன்னை பொய்யன் என்று சொல்லி விடுவார்களோ என்று அச்சம். அதனால் ' ஆஹா , அற்புதமான ஆடை ' என்று சொல்லி தையல்காரனுக்கு நிறைய பொன்னும் பொருளும் கொடுத்தான்.
ராணியும் அவள் பங்குக்குப் பாராட்டி வைத்தாள். உண்மையைச் சொன்னால் பொய்க்காரி என்ற பட்டம் கிடைப்பதோடு மட்டும் அல்லாமல் , தன்னுடைய மற்ற குட்டெல்லாம் வெளியே வந்து விடுமோ என்ற பயம் அவளுக்கு. அதனால் அவளும் ஆஹா ஓஹோ என்று புகழ்ந்து வைத்தாள். ' இந்த ஐந்து தங்கப் பொத்தான்களும் காலரின் சரிகை நிறத்துக்கு ஏற்றபடி இருக்கிறது ' என்றாள் ராணி. தான் உத்தமன் இல்லை என்றாலும் தன் மனைவி பத்தினி என நம்பும் பிற புருஷர்களைப் போலவே ராணியின் சொல் நம்பிக் கிளம்பினான் நகர்வலம்.
மந்திரிகளும் மற்ற அடிபொடிகளும் அந்த ஆடையைக் கண்டு புகழ்ந்த விதம் இருக்கிறதே , அது கவிதை , கவிதை. அருவி போல் கொட்டிய கவிதை. ஆனால் இந்தக் கூத்தையெல்லாம் பார்த்த ஒரு சிறுவன் "ஐயே...ராஜா அம்மணமா வர்றாரு ' என்று கத்திக் கொண்டே ஓடினான். ராஜாவும் கூச்சத்துடன் அரண்மனைக்குள் ஓடி ஒளிந்தார்.
தசாவதாரம் படமும் இந்த உலகத்திலேயே அழகான ஆடையைப் போலத்தான் இருக்கிறது. கருணாநிதியும் , மனோரமாவும் கூட இந்தப் படத்தை இப்படித்தான் புகழ்ந்திருப்பார்கள். அதுவும் கருணாநிதி புகழ்ந்த போது அவர் தன்னுடைய சமீபத்திய உலக சாதனையான ' கண்ணம்மா ' வை நினைத்துப் புகழ்ந்திருப்பாரோ எனவும் சந்தேகமாக இருக்கிறது.
புனேயிலிருந்து பூபதி என்ற என்னுடைய வாசகர் ஒருவர் எழுதியிருந்த கடிதமே மேலே உள்ளது.


மகாநதி என்ற படத்தைப் பார்த்ததிலிருந்து கமல்ஹாசனை என்னுடைய சக பயணியாகவே கருதி வருகிறேன். ஜாதி வெறி , இன வெறி , மொழி வெறி மிகுந்த தமிழ் சினிமா உலகில் நான் அறிந்த வரை கமல் ஒருவரே இந்தக் குறுகிய மனோபாவத்திலிருந்து மாறுபட்டவராகவும் , நவீன பார்வை கொண்டவராகவும் இருந்து வருகிறார். சமீபத்தில் நடந்து முடிந்த ஹொகனேக்கல் உண்ணாவிரத ட்ராமாவில் கூட ரஜினி உட்பட அத்தனை நடிகர்களும் கர்னாடகாவின் மீது போர் தொடுக்க வேண்டும் , அப்படி இப்படி என்று உணர்ச்சிப் பிழம்பாகப் பொங்கிக் கொதித்த போது , கமல் மட்டுமே மொழி , இன உணர்வுக்கு அடிமையாகி விடாமல் தெளிவான மனநிலையுடன் பேசினார். தமிழ்ச் சமூகம் போலியாகக் கொண்டாடி வரும் கற்பு , ஒருவனுக்கு ஒருத்தி போன்ற காலாவதியாகி விட்ட கோட்பாடுகளையும் தூக்கியெறிந்து விட்டவர் கமல். அவரது படங்களில் வரும் கதாநாயகன் பெரும்பாலும் பாலியல் தொழிலாளியையே மணந்து கொள்வான் ; அல்லது , பாலியல் தொழிலாளியின் மகனாக இருப்பான் ; அல்லது , ஏற்கனவே திருமணமாகிக் கைவிடப்பட்ட ஒருத்தியை மணந்து கொள்வான். இதை ஊருக்கு உபதேசம் என்ற வகையில் அல்லாமல் தனது நேர் வாழ்விலும் கடைப் பிடித்தவர் கமல்.
இவை தவிர , உலக சினிமா பற்றிய விரிவான அறிவும் , பார்வையும் கொண்டவர். கமல் எனக்கு எழுதிய கடிதம் ஒன்றில் அமோரெஸ் பெர்ரோஸ் வெளிவந்த போதே அது பற்றிக் குறிப்பிட்டிருந்தார். அதே கடிதத்தில் , கூப இயக்குனர் தொமாஸ் அலெயாவின் மிக முக்கியமான படமான Memories of Underdevelopment பற்றியும் விரிவாக எழுதியிருந்தார். இப்படி உலகத்தின் எந்த மூலையில் எந்தப் படம் வந்தாலும் அதைப் பார்த்து விடும் பழக்கம் உள்ளவர் கமல். சினிமாவின் மீது அவர் கொண்டிருக்கும் passion மட்டுமே இதற்கெல்லாம் காரணம். மேலும் , மற்ற நடிகர்களைப் போல் சினிமாவில் சம்பாதித்ததை அசையாச் சொத்துக்களாக மாற்றாமல் சினிமாவிலேயே மீண்டும் மீண்டும் போடுவது கமலின் சினிமாப் பற்றுக்கு இன்னொரு உதாரணம்.
எனவேதான் தமிழ் சினிமாவில் என் அதிகபட்ச நேசத்துக்குரியவராக இருந்தார் கமல்ஹாசன். அவரை என்னுடைய அலைவரிசையைச் சேர்ந்த ஒருவராகவே எண்ணியிருந்தேன். சமீபத்தில் கூட கேயாஸ் தியரி பற்றி எழுதியிருந்தேன். கமலும் அதே கேயாஸ் தியரியை அடிப்படையாகக் கொண்டு தசாவதாரத்தை எடுத்திருக்கிறார். இந்தத் தியரிக்கும் தசாவதாரத்துக்கும் ஒருவித சம்பந்தமும் இல்லை என்றாலும் , கேயாஸ் தியரி பற்றிக் கூட சிந்திப்பதற்கு தமிழ் சினிமாவில் ஒரு ஆள் இருக்கிறாரே என்று ஒரு ஸஹ்ருதயரைப் பார்த்து விட்ட சந்தோஷம் எனக்கு.
இத்தகைய பின்னணியெல்லாம் இருந்தாலும் தசாவாதாரத்தை நான் சற்று ஏமாற்றத்துடனேயே காணச் சென்றேன். காரணம் , உலகில் எந்த சினிமாவிலும் யாரும் பத்து வேடமெல்லாம் போட்டு நடித்ததில்லை. சினிமா என்பது இலக்கியத்தைப் போல் மற்றொரு கலை வடிவம். அது சர்க்கஸ் அல்ல. சர்க்கஸில் மட்டுமே இப்படிப் பட்ட பத்து வேட கோமாளித்தனமெல்லாம் சாத்தியம். சர்க்கஸில் மட்டுமே யானை டான்ஸ் ஆடும் ; குரங்கும் கரடியும் கால் பந்து விளையாடும். இதை இங்கே ராமநாராயணன் என்று ஒருவர் சினிமாவில் செய்து வருகிறார். அவருடைய படத்தில்தான் நாகப்பாம்பு டைப் அடிக்கும் ; வில்லன் கதாநாயகியைக் கற்பழிக்கும் போது பாம்பு வந்து வில்லனோடு · பைட் பண்ணி அவனைத் துரத்தி விடும். இந்த வேலையை உலக சினிமா பற்றி அறிந்த கமல் செய்யலாமா ? ராம நாராயணனை நான் குற்றம் சொல்ல மாட்டேன். ஏனென்றால் அவர் தெளிவாகச் சொல்லி விட்டார். "பெண்கள் டைப் அடிப்பது மாதிரிதான் படம் எடுத்தேன் ; ஆனால் ஓடவில்லை. பிறகு பாம்பு டைப் அடிப்பது போல் எடுத்தேன். நன்றாக ஓடியது." இப்படி ஏதாவது கமலிடம் விளக்கம் உண்டா ? ஒரே நடிகர் பத்து வேடத்தில் வருவதும் நல்ல பாம்பு டைப் அடிப்பதும் ஒன்றுதானே ? அதனால்தான் தசாவதாரத்தைப் பார்ப்பதற்கு முன்பே படத்தைப் பற்றிய அவநம்பிக்கையுடன் செல்ல நேர்ந்தது.
படத்தின் துவக்கத்தில் வரும் 12 ஆம் நூற்றாண்டுக் காட்சிகள் பலரையும் பிரமிக்க வைத்திருக்கிறது. காரணம் , இதுவரையிலான தமிழ் சரித்திரப் படங்களில் வெறும் அட்டைப் பெட்டிகளையே அரண்மனை என்று அடுக்கிவிடுவார்கள். ராஜா நடக்கும் போது படிக்கட்டுகள் ஆடும். ஒரு மன்னனுக்கும் இன்னொரு மன்னனுக்கும் போர் என்றால் அந்தப் பக்கம் ஐம்பது பேர் , இந்தப் பக்கம் ஐம்பது பேர் குதிரையில் நின்று சண்டையிடுவார்கள். (உ-ம்: சிவாஜி கணேசனின் திருவிளையாடல்) தசாவதாரத்தில் அப்படியில்லாமல் நிஜமான கோவிலையும் , நிஜமான மக்கள் கூட்டத்தையும் காண்பித்து இருக்கிறார்கள். ஆனால் காட்சி ஜோடனையில் மட்டும்தான் நிஜம். மற்றபடி சிதம்பரம் கோவிலில் பெருமாளின் சிலையைக் காப்பாற்றுவதற்காக ரங்கராஜ நம்பி (கமலின் முதல் அவதாரம்) குலோத்துங்கச் சோழனின் ஆட்களை ஒற்றை ஆளாக அடித்து துவம்சம் செய்யும் போது , விஜய் த்ரிஷாவை பிரகாஷ் ராஜிடமிருந்து காப்பாற்றுவதற்காக என்னென்ன ஹீரோ சேஷ்டையெல்லாம் செய்வாரோ அவ்வளவையும் கமல் செய்கிறார். குலோத்துங்கனாக வரும் நெப்போலியன் ஏதோ காமெடியன் மாதிரி இருக்கிறார். அது சரி , பனிரண்டாம் நூற்றாண்டில் மனம் புத்தி இந்திரியம் ஆகியவற்றுக்கு விகாரம் இல்லாத ஸத்வ குணத்தை அளிக்கக் கூடிய ஆகாரத்தை உண்டு பெருமாள் சேவை செய்து கொண்டிருந்த ஸ்ரீ வைஷ்ணவர்கள் இப்படித்தான் மல்யுத்த வீரர்களைப் போல் இருந்தார்களா ?
இந்தப் பனிரண்டாம் நூற்றாண்டுத் துவக்கத்திற்குப் பிறகு கதை எந்த வித சம்பந்தமும் இல்லாமல் 21 ஆம் நூற்றாண்டுக்குத் தாவி விடுகிறது. பிறகு ஏன் அந்த ரங்கராஜ நம்பி ? இம்மாதிரி கேள்வியெல்லாம் கேட்கக் கூடாது. கமல் ஆசைப்பட்டார் ; அவ்வளவுதான்.
அமெரிக்க விஞ்ஞானி கோவிந்த் (கமல்) உலகையே அழிக்கும் வைரஸைக் கண்டு பிடித்துத் தொலைக்கிறான். அதற்கு நிதி உதவி செய்பவர் அமெரிக்க அதிபர் புஷ். (புஷ்ஷும் கமலே). அந்த வைரஸை கோவிந்திடமிருந்து அபகரித்து விற்க முனைகிறான் ஃப்ளெட்சர் என்ற அமெரிக்க வில்லன். ஃப்ளெட்சரும் கமலே. இவர்களோடு கூட , உளவுத்துறை அதிகாரி பல்ராம் நாயுடு , ருக்மிணி பாட்டி (வயது 105), தலித் தலைவரான வின்சென்ட் பூவராகவன் , பஞ்சாபி பாடகர் அவ்தார் சிங் , ஏழு அடி உயரமுள்ள கலீ · ஃபுல்லா , தங்கையின் மரணத்திற்குப் பழி வாங்கத் துடிக்கும் ஜப்பானிய கராத்தே வீரர் என்று பத்து வேடங்களில் ஜொலிக்கிறார் கமல். Narcissism என்று கேள்விப் பட்டிருக்கிறோம் ; ஆனால் இந்த நார்சிஸிஸமே ஒரு நோயாக முற்றி ஒரு சமூகத்தையே துன்பம் செய்யும் என்றால் அது கமலின் நார்சிஸிஸம்தான். அதை இந்த தசாவதாரம் படத்தில் கண்டு உணரலாம்.
" நான் சிறுவனாக இருந்த போது தெரு நாடகங்களுக்கு நல்ல வரவேற்பு உண்டு. அன்று மாலை நாடகம் என்று கேள்விப் பட்டு பக்கத்து வீட்டுப் பாட்டியைக் கூப்பிட்டேன். ' போடா நான் வரலை ; அதெல்லாம் குடும்பக் கட்டுப்பாட்டு நாடகங்கள் ' என்றார் பாட்டி. பிரச்சாரத் தன்மை வாய்ந்த எல்லா நாடகங்களுக்கும் பாட்டி வைத்த பெயர் அது. கிட்டத்தட்ட அது போல்தான் இருக்கின்றனர் கிறித்தவ , முஸ்லீம் கமல்கள்" என்று குறிப்பிடுகிறார் பூபதி என்ற அந்த வாசகர்.
கலீஃபுல்லாவாக வரும் ஏழு அடி உயர கமல் நிச்சயமான ஒரு சர்க்கஸ் கோமாளிதான். நம்மூர் சர்க்கஸ்களில் ஏழு அடி என்ன , ஒன்பது அடி உயரத்தில் கூட காலில் கட்டையை வைத்துக் கொண்டு நடக்கும் பஃபூன்களை நாம் பார்த்ததில்லையா என்ன ? அபூர்வ சகோதரர்களில் குள்ளனாக நடித்து முடித்து விட்டதால் இப்போது கமலுக்கு உயர மனிதனாக நடிக்க ஆசை வந்து விட்டது போலும்...மற்றபடி கலீஃபுல்லாவுக்கும் கதைக்கும் கொஞ்சமும் சம்பந்தமில்லை.
ருக்மிணி பாட்டியாக வரும் கமல்: மிருக வதைச் சட்டம் என்ற ஒன்று இருக்கிறது. இச்சட்டத்தின்படி சினிமாவில் குதிரை , குரங்கு மற்றும் இன்னோரன்ன மிருகங்களை யாரும் வதை செய்யக் கூடாது. ஆனால் , இப்படி கமலைப் போல் சுய வதை செய்து கொள்ளலாமா ? தன்னுடைய சரீரம் என்பதால் அதைத்தான் அவர் என்ன பாடு படுத்துகிறார்! அதுவும் ஏதாவது உயரிய நோக்கத்துக்காக இருந்தாலாவது பரவாயில்லை. போயும் போயும் சர்க்கஸ் கோமாளி வித்தைக்காக இவ்வளவு சித்ரவதை!
தலித் தலைவராக வரும் வின்சென்ட் பூவராகவன்...நாம் எவ்வளவுதான் தலித் ஆதரவு சிந்தனை கொண்டவராக இருந்தாலும் , நம்முள்ளே உறைந்திருக்கும் உயர்சாதி மனோபாவம் என்பது இப்படித்தான் தலித் விரோதமாக வெளிப்படும் என்பதற்கு இப்பாத்திரச் சித்தரிப்பு ஒரு உதாரணம். படத்தில் வரும் அத்தனை பாத்திரங்களும் நல்ல வனப்புடனும் , வடிவுடனும் காண்பிக்கப் பட்டிருக்கும் போது பூவராகவன் மட்டும் ஏன் இத்தனை அருவருப்பான தோற்றத்துடன் காண்பிக்கப் பட்டிருக்கிறார் (இடி அமீனை ஞாபகப் படுத்திக் கொள்ளுங்கள்). ஏன் , தலித் மக்கள் என்றால் அவ்வளவு அருவருப்பான தோற்றத்துடனா இருக்கிறார்கள் ? மேலும் ஒரு குரூரமான விஷயம் என்னவென்றால் , வில்லன் கமல் தவிர அத்தனை கமல்களுக்கும் படத்தின் முடிவில் நல்வாழ்வு கிடைக்கிறது. ' விஞ்ஞானி ' கோவிந்த் ஹீரோயின் அசினிடம் கடவுள் பற்றிய ஒரு உளுத்து போன வசனத்தைச் சொல்லி கொஞ்சிக் கொண்டிருக்கிறான். ஆனால் தலித் தலைவன் வின்சென்ட் பூவராகவன் மட்டும் ஒரு மணல் கொள்ளையனின் பிள்ளையைக் காப்பாற்றுவதற்காக தன் உயிரை விடுகிறான். என்ன இது நியாயம் ? தலித்துகள் மட்டும் உயர் சாதிக்காரன்களுக்காக காலம் காலமாக உயிர்த் தியாகம் செய்து கொண்டேயிருக்க வேண்டுமா ?
இந்த தலித் காட்சிகளில் வரும் மற்றொரு அபத்தம் , சினிமா பாடலாசிரியர் கபிலன். இவர் ' கவிஞர் ' கபிலனாகவே படத்தில் வருகிறார். வரட்டும். பாதகமில்லை. ஆனால் தனது தலைவன் இளம் வயதில் அதிர்ச்சி தரும் வகையில் இறந்து போகும் போது கபிலன் கவிதை பாடி தன் சோகத்தை வெளிப்படுத்துகிறார். கவியரங்கத்தில் அல்ல ; தலித் தலைவன் வின்சென்டின் பிணத்துக்கு எதிரே. கொன்று விடுவார்கள் ஐயா , கொன்று விடுவார்கள். தன் தலைவன் இறந்து கிடக்கும் வேளையில் உணர்ச்சிக் கொந்தளிப்பில் இருக்கும் தொண்டர்கள் எவனாவது கவிதை கிவிதை பாடினால் அவனை உயிரோடு விடுவார்களா என்ன ? இந்த அடிப்படைப் புரிதல் கூட கமலுக்கு இல்லை.
வின்சென்டுக்கு எதிராக வரும் வில்லன் சந்தான பாரதி. இந்த நடிகர் ஏன் இத்தனைப் பல ஆண்டுகளாக தொடர்ந்து பெண்களைக் கற்பழித்துக் கொண்டே இருக்கிறார் என்று புரியவில்லை. கமலுக்கு உலக நாயகன் பட்டம் என்றால் சந்தான பாரதிக்கு கற்பழிப்பு நாயகன் என்றுதான் பட்டம் கொடுக்க வேண்டும்.
தலித்துகளை அவமானப்படுத்தியது போல் முஸ்லீம்களையும் படு மோசமாக அவமானப்படுத்தியிருக்கிறார் கமல். கலீஃபுல்லாவும் அவருடைய குடும்பமும் ஏதோ ஆஃப்கானிஸ்தானைச் சேர்ந்தவர்களைப் போல் காண்பிக்கப் பட்டிருக்கிறார்கள். அவர்கள் பேசும் மொழி , நடை , உடை , பாவனை , உருவம் எல்லாமே ஆ · ப்கன் முஸ்லீம்களை ஞாபகப் படுத்துகிறது. தமிழ்நாட்டு முஸ்லீம்கள் இப்படியா இருக்கிறார்கள் ? இங்கே யாருடைய மத அடையாளத்தையும் அவர்களுடைய உருவத்தை வைத்துக் கண்டு பிடிக்க முடியாது. ஒரு சிலர் அப்படியிருக்கலாம். ஆனால் பெரும்பான்மையான மனிதர்களின் மத அடையாளத்தை அப்படிக் கண்டு பிடித்து விட முடியாது. எதார்த்தம் அப்படியிருக்கும் போது , கமல் ஏன் முஸ்லீம்களை அந்நியர்களைப் போல் காண்பிக்க வேண்டும் ? ஒரு டஜன் குழந்தைகளைப் பெற்றுக் கொண்டு , யாருக்கும் புரியாத ஒரு மொழியைப் பேசிக் கொண்டு , படிக்காதவர்களாக , பல நூற்றாண்டுகளுக்கு முற்பட்டவர்களாக...இப்படியா இருக்கிறார்கள் தமிழ்நாட்டு முஸ்லீம்கள் ? இவர்களை இப்படி அந்நியர்களாகக் காண்பிப்பதில் ஒரு அரசியல் இருக்கிறது. அதுதான் இந்துத்துவா அரசியல். ஆனால் இந்துத்துவ அரசியலுக்கு மாறுபட்ட முற்போக்காளரான கமல் எப்படி இம்மாதிரி ஒரு இந்துத்துவப் பார்வையை முன்வைக்கிறார் ? பிராமணர்கள் ஐரோப்பாவிலிருந்தும் , மத்திய ஆசியாவிலிருந்தும் கைபர் கணவாய் வழியாக வந்த அந்நியர்கள் என்று சொல்வதில் எத்தகைய மூடத்தனமும் , இன வெறியும் அடங்கியுள்ளதோ அதே அளவு மூடத்தனமும் , இனவெறியும் முஸ்லீம்களை இப்படி அந்நியர்களாகக் காண்பிப்பதிலும் அடங்கியுள்ளது. கமலின் இப்படிப் பட்ட முஸ்லீம் விரோதப் போக்கும் , இந்துத்துவப் பார்வையும் ஹே ராமில் எவ்வளவு பட்டவர்த்தனமாக வெளிப்பட்டுள்ளது என்பதை ஹே ராம் விமர்சனத்தில் நான் சுட்டிக் காட்டியிருக்கிறேன்.
தீவிரவாதிகளைத் தேடுகிறோம் என்ற பின்னணியில் கலீஃபுல்லா குடும்பமும் , இன்னும் அந்த ஊரிலுள்ள அத்தனை முஸ்லீம் குடும்பங்களும் விசாரணைக்காக ஆட்டு மந்தைகளைப் போல் மசூதியில் அடைக்கப் படுகிறார்கள். அப்போதுதான் சுனாமி வந்து ஊரிலுள்ள பலரும் சாக நேர்கிறது. அப்போது மசூதியில் இருக்கும் கலீஃபுல்லாவின் வாப்பா "நல்ல காலம் , நாம் மசூதியில் இருந்ததால் சுனாமியிலிருந்து தப்பினோம்" என்று கூறுகிறார். இந்த வசனத்தில் அடங்கியிருக்கும் அரசியல் என்ன என்பதை கமல் இப்போது தசாவதாரம் பற்றிக் கொடுத்துக் கொண்டிருக்கும் நூற்றுக் கணக்கான தொலைக்காட்சிப் பேட்டி ஒன்றிலாவது விளக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
கதைக்குத் துளியும் சம்பந்தமேயில்லாத பஞ்சாப் பாடகர் அவ்தார் சிங் மற்றொரு ப்ளாக் ஹ்யூமர் வகை. அவர் ரத்தம் கக்கிக் கொண்டே பாடும் பாங்ரா பாடல் பஞ்சாபிகளையே அவமானப் படுத்துவதாகும். எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்னால் வந்த ' எங்க வீட்டுப் பிள்ளை ' படத்தில் வரும் ' ஆடலுடன் பாடலைச் சேர்த்தால்... ' என்ற பாடலுக்கு எம்ஜியார் என்னமாய் பாங்ரா நடனம் ஆடுவார் ; அந்தப் பாடலும்தான் இன்று கேட்டாலும் எவ்வளவு குதூகலமாக இருக்கும்! அந்தப் பாடல் தரும் கொண்டாட்டத்தின் பக்கத்தில் கூட ஹிமேஷ் ரேஷமய்யாவின் பாடல் வரவில்லையே ? மேலும் , அவ்தார் சிங் பேசும் பஞ்சாபி , தமிழர்கள் பஞ்சாபி பேசுவது போல் இருக்கிறது. பஞ்சாபி மொழிக்கே உரிய விசேஷமான nasal தன்மை கமலின் உச்சரிப்பில் காணாமல் போய் விட்டது.
இதே போல் கமலின் ஜப்பானிய கராத்தே வீரர் வேடமும் படத்துக்குச் சிறிதும் சம்பந்தமே இல்லாதது. ஜப்பானிய கமல் கராத்தே சண்டை போடுகிறார் ; ஜப்பான் மொழி பேசுகிறார் ; வில்லனை அடித்து உதைக்கிறார். அந்த வில்லன் கமல் ஃப்ளெட்சர் தாங்க முடியாத அசிங்கம். அதே போல் புஷ் கமல். கடைசிக் காட்சியில் மேடையில் கருணாநிதி அமர்ந்திருக்கும் போது புஷ் டான்ஸ் எல்லாம் ஆடுகிறார். மிமிக்ரி நடிகர் தாமு செய்வதையெல்லாம் கமல் செய்து காண்பித்தால் அப்புறம் இந்த உலக நாயகன் பட்டத்தை தாமுவுக்கே கொடுக்கலாமே ; கமல் எதற்கு ? மேலும் , இப்போதெல்லாம் அரசியல் கட்சி ஊர்வலங்களிலும் , மாநாடுகளிலுமே இப்படி கருணாநிதி மாதிரியும் , எம்ஜியார் மாதிரியும் , காந்தி நேரு மாதிரியும் வேஷம் கட்டிக் கொண்டு வந்து அசத்துகிறார்கள். சில தொலைக்காட்சிகளிலும் கூட இப்படி அச்சு அசலாக புஷ் , ஒசாமா பின் லாடன் , ஹிட்லர் என்று பல வேஷங்களில் வந்து அவர்களைப் போலவே பேசிக் காட்டுகிறார்கள். சரி , இப்படி ஒவ்வொரு முகமூடியாக மாற்றி மாற்றி முகத்தில் போட்டுக் கொண்டால் ஒருவரே நூறு வேடம் போடலாமே ? இதில் என்ன பெரிய சாதனை இருக்கிறது ? இவ்வளவு தூரம் அரசியல் மாநாடுகளிலும் , தொலைக்காட்சி சேனல்களிலும் சிரிப்பாய் சிரித்துக் கொண்டிருக்கும் ஒரு விஷயத்திற்கு கமல் ஹாலிவுட்டிருந்தெல்லாம் ஒப்பனைக்காரர்களை வரவழைத்து ஒப்பனை செய்து கொண்டு பல மணி நேரம் தண்ணீர் குடிக்காமல் , சாப்பிடாமல் மெனக்கெட்டிருக்கிறார்.
கமலுக்கு ஒப்பனை செய்தவர் ஓமன் , எக்ஸார்ஸிஸ்ட் போன்ற பேய்ப் படங்களுக்கு ஒப்பனை செய்தவராம். அதனால்தான் விஞ்ஞானி கோவிந்த் தவிர ஒன்பது பேய்களை உலவ விட்டிருக்கிறார் போலும்!
இப்போதெல்லாம் ஒருவரே நூறு வேடத்தில் கூட நடிக்கலாம். ஒசாமா பின் லாடனைப் போல் ஒரு முகமூடியைச் செய்து முகத்தில் ஒட்டிக் கொண்டால் ஆயிற்று கதை. வெளிநாடுகளில் அரசியல் போராட்டங்களின் போது தங்களுக்குப் பிடிக்காத ஒரு அரசியல் தலைவரின் முகமூடியை ஆயிரக்கணக்கான பேர் முகத்தில் அணிந்து கொண்டு ஊர்வலம் போவது சகஜமாகப் பார்க்கக் கூடிய ஒன்று. ஒரே ஊர்வலத்தில் ஆயிரம் புஷ்களை நாம் பார்க்க முடியும். அப்படியிருக்க , இதற்கெல்லாம் போய் உலக நாயகன் பட்டம் கொடுத்துக் கொண்டிருந்தால் எப்படி ?
கமலின் பிரச்சினை , சிவாஜியும் , சிவாஜி ராவும்தான். ' சிவாஜி ஒன்பது வேடத்தில் நடித்தார். நான் பத்து வேடத்தில் நடிப்பேன். அடுத்த பிரச்சினை , இன்னொரு சிவாஜி. அது ரஜினி நடித்த படம். அந்தப் படத்திற்கு செலவழித்த அத்தனை கோடிகளும் என் படத்திற்கும் செலவு செய்யப் பட வேண்டும் '. சிவாஜியே ஒரு குப்பை. அந்தக் குப்பையிடம் போட்டி போட்டுத் தோற்றிருக்கிறது தசாவதாரம். இதற்குப் போய் ஏன் உலக சினிமா அது இது என்று பந்தா பண்ண வேண்டும் ?
***
சமீபத்தில் ஒரு சினிமா நிகழ்ச்சியில் ' உலக நாயகன் கமலுக்கு ஆஸ்கார் பரிசு தரப் பட வேண்டும் ' என்று சிலர் உளறிய போது , பதில் பேச வந்த கமல் "வெள்ளைக்காரனுக்கு நாம் பரிசு கொடுக்கும் நிலை வர வேண்டும் ; அது என் காலத்துக்குள் நடக்கும்" என்று கூறியிருக்கிறார். அப்படியானால் கமல் சிரஞ்சீவியாகவே வாழ வேண்டியிருக்கும். ஏனென்றால் அவர் எதிர்பார்க்கின்ற அந்த நிலை தமிழ்நாட்டில் என்றைக்குமே வராது. இந்தியாவிலேயே philistine கலாச்சாரம் தலையோங்கி நிற்கும் மாநிலம் தமிழ்நாடு. வேறு எந்த மாநிலமும் இவ்விஷயத்தில் தமிழ்நாட்டோடு போட்டி போட முடியாது. (வேண்டுமானால் போனால் போகிறதென்று பீகாரை சேர்த்துக் கொள்ளலாம்). தமிழ்நாட்டின் philistine கலாச்சாரம் எப்படி இருக்கிறதென்றால் , இங்கேதான் குஷ்புவையும் த்ரிஷாவையும் கஞ்சா கருப்புவையும் , இவர்களுக்கிடையே ஒரு சாகித்யகாரனான இந்திரா பார்த்தசாரதியையும் சமமான அளவில் வைத்து கலை மாமணி விருது வழங்கப்படுகிறது. இப்படிப் பட்ட அவலம் உலகின் எந்த மூலையிலாவது நடக்கக்கூடிய வாய்ப்பு உண்டா ? இப்பேர்ப்பட்ட ' புகழ் வாய்ந்த ' கலை மாமணி விருதைத்தான் வெர்னெர் ஹெர்ஸாகையும் , யான்ஸ்கியையும் , ஹோர்ஹே ஸான்ஹினேஸையும் , ரவூல் ரூயிஸையும் , இவர்களைப் போன்ற இன்னும் பல திரைப்பட மேதைகளையும் சென்னைக்கு வரவழைத்து ' கலைஞர் ' கையால் வழங்கலாம் என்கிறாரா கமல் ? பாவம் , எனக்கு அந்த அம்மண ராஜா ஞாபகம் வருகிறார்.
கமல் கிட்டத்தட்ட ஜெயலலிதாவைப் போல் ஆகி விட்டார் என்று நினைக்கிறேன். ஜெயலலிதாவைத்தான் யாரும் கட்சிக்குள்ளிருந்து விமர்சிக்க முடியாது. விமர்சிப்பவன் விரோதி என்ற தர்மம் அக்கட்சியினுடையது. மற்றும் , எல்லோருமே அவரை புரட்சித்தலைவி என்றே அழைக்க வேண்டும் ; நினைக்க வேண்டும். அதே போல் கமலை யாரும் விமர்சிக்க முடியாது. விமர்சித்தால் அவர் கமலின் விரோதி ; கமலின் சினிமா ஆர்வத்தைப் புரிந்து கொள்ளாத முட்டாள். மேலும் , அவரை உலக நாயகன் என்றே கருத வேண்டும். அப்படிக் கருதாதவருக்கு ஏதோ மோசமான உள்நோக்கம் இருக்கிறது. இதுதான் கமலின் இப்போதைய நிலை. கமலை மனோரமாவும் , கருணாநிதியும் , ரஜினியும்தான் உலக நாயகன் என்று மேடையில் புகழ்கிறார்கள். இவர்களுக்கு உலக சினிமா பற்றித் தெரியுமா ? இவர்கள் தனியாக இருக்கும் போது தசாவதாரம் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதைக் கமல் அறிவாரா ? (' அப்பாடா , இப்போதுதான் நிம்மதியாக இருக்கிறது ' என்றுதான் படத்தைப் பார்த்து விட்டு நினைத்திருப்பார் ரஜினி). இந்த முகஸ்துதி கூட்டத்திலேயே உலக சினிமா பற்றித் தெரிந்த ஒரே ஆள் கமல்தான். அப்படியிருக்க , இந்தக் கூட்டம் தன்னை உலக நாயகன் என்று சொல்லும் போது , அந்த வார்த்தை ' புரட்சித்தலைவி ' என்ற வார்த்தைக்குச் சமமானது என்று கமலுக்குத் தெரிந்திருக்க வேண்டாமா ?
விஞ்ஞானி கோவிந்தின் அப்பாவின் பெயர் ராமசாமி நாய்க்கர் என்று வருகிறது. கோவிந்தும் அடிக்கடி நாத்திகம் பேசுகிறான். முதலில் இந்த நாத்திக ஆத்திக சண்டையெல்லாம் காலாவதியாகி விட்ட விஷயங்கள் என்றே கமலுக்குத் தெரியவில்லை. இப்போதெல்லாம் ஆத்திகவாதிகள்தான் ஆதங்கவாதிகளாக மாறி , மற்ற மதத்தினரை வெட்டிப் போடுவதும் அவர்கள் மீது குண்டு வீசுவதுமாக இருக்கிறார்கள். நாத்திகவாதிகள் பாவம் , இந்தக் குண்டு வீச்சு கலவரங்களுக்கிடையே தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டி மஞ்சள் துண்டை அணிந்து கொண்டு பாபாவிடம் ஆசீர்வாதம் வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். இன்றைய பிரச்சினை மதத் தீவிரவாதம்தானே தவிர ஆத்திகம் X நாத்திகம் அல்ல என்பது கூட கமலுக்குத் தெரியவில்லை. விஞ்ஞானி கோவிந்தைப் போலவே கமலும் நேர் வாழ்வில் அடிக்கடி நாத்திக வாதம் பேசுகிறவர்தான் ; பெரியாரையும் பாரதியையும் தனது ஆசான்கள் எனச் சொல்லிக் கொள்பவர்தான். ஆனால் பாரதி பற்றியும் , பெரியார் பற்றியும் படம் எடுக்க ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரியான ஞான. ராஜசேகரன் அல்லவா வர வேண்டியிருந்தது ? உலக சினிமாவை அறிந்த கமலால் ஏன் அது முடியவில்லை ?
வட நாட்டைச் சேர்ந்த கேதான் மேத்தா , மீரா நாயர் போன்ற பலரை (பெரிய பட்டியலே இருக்கிறது) உலக அளவில் கொண்டாடுகிறார்கள். வட நாடு ஏன் , தமிழ்நாட்டுக்குப் பக்கத்தில் உள்ள கேரளத்தில் ஜான் ஆப்ரஹாம் , அரவிந்தன் , அடூர் கோபால கிருஷ்ணன் என்று சீரியஸ் சினிமாவுக்கு ஒரு பாரம்பரியமே இருக்கிறது. அங்கே ஒரு இளைஞன் 50 லட்ச ரூபாயில் ஒரு படத்தை எடுத்து அதை கான் திரைப்பட விழாவில் திரையிட்டுக் காட்ட முடிகிறது. சமீபத்தில் 50 லட்சத்திலிருந்து ஒரு கோடி ரூபாய்க்குள் எடுக்கப் பட்ட பல சீரியஸ் மலையாளத் திரைப்படங்களைப் பார்த்தேன். பிரபலமான நடிகர்கள்தான் இவற்றில் நடித்துக் கொடுத்திருக்கிறார்கள். வெள்ளைக்காரர்கள் தங்களின் உலகப் புகழ்பெற்ற விருதுகளைக் கொடுக்க முன்பு கேரளத்துக்கும் வங்காளத்துக்கும் வந்து கொண்டிருந்தார்கள். ஆனால் இப்போதோ கேரளமும் வங்காளமும் அந்த வெள்ளைக்காரர்களை அழைத்து விருது வழங்கிக் கொண்டிருக்கிறது. திருவனந்தபுரத்தில் நடக்கும் திரைப்பட விழா , கான் திரைப்பட விழா அளவுக்கு உலகெங்கிலும் பேசப்பட்டு வருகிறது. சீலேவைச் சேர்ந்த மிகெல் லித்தின் சென்ற ஆண்டு திருவனந்தபுரம் திரைப்பட விழாவுக்கு வந்திருந்தார். இவர் உலக சினிமாவில் ஒரு legend- ஆக மதிக்கப் படுபவர் என்பதும் கமலுக்கு நன்றாகவே தெரியும்.
ஆனால் தமிழ் சினிமாவும் இன்று உலக சினிமாவை நோக்கி மெல்ல மெல்ல நகர்ந்து கொண்டுதான் இருக்கிறது. மாற்று சினிமாவை பற்றிச் சிந்திக்கும் செல்வ ராகவன் , அமீர் , பாலாஜி சக்திவேல் , வசந்த பாலன் , சிம்பு தேவன் என்று பலரும் இன்று தமிழ் சினிமாவை கௌரவமான திசையை நோக்கி நகர்த்திக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் மட்டுமல்லாமல் ஜனரஞ்சக சினிமா என்ற பகுதியைச் சேர்ந்த கௌதம் மேனன் , மிஷ்கின் போன்றவர்களும் அந்தப் படங்களை கலாபூர்வமான அனுபவத்தைத் தரும் அளவுக்கு மாற்றிக் கொண்டிருக்கிறார்கள். ' அஞ்சாதே ' என்ற படத்தில் மிஷ்கின் மூன்று மணி நேரத்துக்குப் பார்வையாளர்களை இருக்கையின் விளிம்பில் உட்கார வைக்கிறார். கமலுக்கு சினிமா என்பதன் அடிப்படை உத்தியான இது கூடத் தெரியவில்லை. ஒன்னே முக்கால் மணி நேரத்துக்கு உலகை அழிக்கும் வைரஸ் உள்ள சப்பை டப்பாவை விஞ்ஞானி கமலும் , வில்லன் · ப்ளெட்சரும் துரத்திக் கொண்டு அலைவதைப் பார்க்கும் போது சில சமயங்களில் கொட்டாவியும் , சில சமயங்களில் அழுகையும்தான் வருகிறது. பயங்கரமான சலிப்பைத் தரக்கூடிய ' சேஸிங் ' காட்சிகள் அவை.
ஒரே கதையின் இழைகள் சிதம்பரம் , ந்யூயார்க் , டோக்யோ என்ற மூன்று வெவ்வேறு தேசங்களில் உள்ள ஊர்களில் ஊடுபாவி பின்னப் பட்டிருப்பதாக சொல்ல நினைத்து ஒரு அரைவேக்காட்டு அவியலைக் கொடுத்திருக்கிறார் கமல். ஆனால் அவரே சில ஆண்டுகளுக்கு முன்னால் எனக்கு அறிமுகப் படுத்திய Alejandro Gonzalez Inarittu வின் ( அமோரெஸ் பெர்ரோஸ் இயக்குனர்) சமீபத்திய படமான Babel (2006) - ஐ ஞாபகப் படுத்துகிறேன். மொராக்கொ , ஜப்பான் , மெஹிகோ , அமெரிக்கா என்ற நான்கு தேசங்களில் பல்வேறு பின்னணியில் வசிக்கும் வித்தியாசமான மனிதர்களை எப்படி ஒரே சம்பவம் பின்னிப் பிணைக்கிறது என்பதை இந்த நான்கு தேசங்களின் சமூக கலாச்சார அரசியல் பிரச்சினைகளோடு கலந்து ஒரு அரசியல் சினிமாவாக ஆக்கிக் கொடுத்திருக்கிறார் கொன்ஸாலஸ் இனாரித்து. டோக்யோவில் உள்ள ஒரு பதினெட்டு வயதுப் பெண்ணின் பிரச்சினையையும் , மொராக்கோவில் ஏதோ ஒரு கண்காணாத கிராமத்தில் வசிக்கும் பத்து வயதுச் சிறுவனின் பிரச்சினை நியூயார்க்கில் வாழும் ஒரு குடும்பத்தை எந்த அளவுக்கு உருக்குலைத்து விட்டது என்பதையும் அவ்வளவு துல்லியமாகக் காட்டியிருப்பார் இனாரித்து. ஆனால் கமலுக்கு இங்கே ஒரு தலித்தையும் , முஸ்லீமையும் கூட சரியாகக் காண்பிக்கத் தெரியவில்லை.
கடைசியாக ஒன்று. இது ஒரு ஆசிய வெள்ளைக்காரர் சொன்னது. கமலின் பத்து வேடங்களைப் பற்றிக் கேள்விப்பட்டதும் உடனடியாக ஜாக்கி சான் கேட்டாராம் , ' தமிழ் சினிமாவில் அந்த அளவுக்கு நடிகர்கள் பஞ்சமா ?' என்று.
இந்தப் படத்தை நிஜமான வெள்ளைக்காரர்கள் பார்த்தால் என்ன சொல்வார்கள் என்று நினைத்துப் பார்க்கவே கூச்சமாக இருக்கிறது.

இதற்கு என் பதிலாக நான் சாருவிற்கு அனுப்பிய கடிதம் (07/Jul/2008)

தசாவதாரம் - ஓர் எதிர்வினைக் கடிதம்

 

சாருவிற்கு,

 

உங்களுடைய தசாவதாரம் மற்றும் கமல் பற்றிய விமர்சனத்திற்கு எதிர்வினையாக இப்படி ஒரேயொரு  கடிதம் வரும் என்று நீங்கள் சற்றும் எதிர்பார்த்து இருக்க மாட்டீர்கள். தங்களை இதுவரை விமர்சிக்க எண்ணாத  வாசகனாகிய என்னையையும்  தங்களை விமர்சிக்க வைத்ததே தங்களின் தசாவதாரம்  மற்றும் கமல்  பற்றிய விமர்சனமே.

 

சாமான்யனுக்கு படம் புரியவே செய்யாது என்று கூறி இப்படத்திற்கு 43 மதிப்பெண்கள் வழங்கியது விகடன். (இதே விகடனார் MP பற்றி பேசிய அஹ்ரஹாரத்து 'அன்னியனுக்கு' 48 மதிப்பெண்கள் வழங்கியது அவா வேறு விஷயம்). முதலில் உங்களையும்   நான் அப்படிபட்ட சாமான்யனாகத்தான் பார்க்கிறேன். ஏனெனில் தூக்கம் வராமல் தவித்து மனைவியார் இட்டுவிட்ட பாபாவின் விபூதியின் பேராற்றாலால் தூங்கி, எழுந்தவுடன் சாமான்ய ஆத்திகவாதியான (தனக்கு கஷ்டம் என்று வந்தால் 20 வருடமாக பேசும் நாத்திகம் என்பதெல்லாம் சும்மாதானோ)  உங்களை நான் வேறு எப்படி பார்ப்பது.

 

இப்படம் உலக சினிமா என்று யார் உங்களிடம் சொன்னார்கள். கமல்கூட இதை visual effect technologyயில் வெளிவந்திருக்கும் தமிழ்படம் என்றுதானே சொல்கிறார். ஒன்று புரிந்து கொள்ளுங்கள்  ஒரு இயக்குனர் இந்தியாவில் இருந்து கொண்டு நான் உலக சினிமா தருகிறேன் என்று சொன்னால் நம்பிவிடாதீர். இந்தியாவில் சினிமா வெறும் வியாபாரந்தான். கலையாகவும், கருவியாகவும் அதை யாரும் பார்ப்பதில்லை. இங்கே 5 பாட்டு, 15 நிமிட காமெடி, சண்டைக்காட்சிகள் என்று 150 நிமிடங்கள்தான் வியாபாரமாக சினிமா சொல்லப்படுகிறது.

 

கமலே, உங்களைவிட மற்ற இயக்குனர்கள் நல்லபடம் தந்து தமிழ்சினிமாவை முன்னே எடுத்துச் செல்கிறார்கள் என்று கூறுகிறீர்கள். அதில் வெயில் படம் எடுத்த வசந்தபாலனையும் சேர்த்துக்கொண்டீர்கள். இதே வெயில் படத்தை பார்த்து விட்டு ஒரு அருவெறுப்பான படம் குமட்டிக்கொண்டு வந்தது என்று அப்போது விமர்சித்த நீங்கள் கமலை திட்ட வேண்டும் என்பதற்காக அதே வசந்தபாலனுக்கு பாரட்டுப்பத்திரம் இப்போது நீங்கள் வழங்குவது ஏனோ? அடுத்தபடியாக அமீர். இவர் எடுத்த பருத்திவீரனில் கடைசியில் வரும் 20 நிமிடக்காட்சிகளை ஆரம்பத்திலேயே CBFC வெட்டி சுருக்கியது. ஆனால் படம் அந்த வெட்டப்பட்ட காட்சிகளுடனே வெளியிடப்பட்டது. இதை அமீரிடம் கேட்டபோது அவர் சொன்ன பதிலால் எனக்கு பருத்திவீரனே பிடிக்காமல் போய்விட்டான். வெட்டப்பட்ட காட்சிகளையும் சேர்த்தே Producerதான் வெளியிட்டுவிட்டார் என்று Producer மீது பழியை போட்டுவிட்டு அப்படத்திற்கு பறந்து பறந்து விருதுகளை வாங்கிக்கொண்டிருக்கிறார். இப்படி பொறுப்பற்று பேசியவருக்கே உலக விருதுடன் இப்போது உங்களுடைய பாராட்டுப்பத்திரமும். (CBFC வெட்டித் தள்ளிய காட்சிகளையும் பார்த்துவிட்டு நாயகிற்கு National Award கொடுத்துள்ளது நம்முடைய குழு ஒன்று. இதற்குத்தான் நாம் கூச்சப்பட வேண்டுமே தவிர தசாவதாரத்தை வெள்ளைக்காரன் பார்த்துவிட்டு அவன் சொல்லப்போவதிற்கு கூச்சப்படக்கூடாது)

 

கமலுக்கு பிடித்த பாரதியையும், பெரியாரையும் பற்றி ஏன் அவர் படம் எடுக்கவில்லை என்பது உங்கள் கேள்வி. உங்களுடைய 20 வருட நாத்திக வாழ்க்கையில் நீங்கள் எத்தனை பகுத்தறிவு படைப்புகளை படைத்து இருக்கிறீர்கள்? அப்போது சொன்ன கிரியா யோகா ரஜினி பற்றியவை எல்லாம் இப்போது அப்படியே தலைகீழாக மாறி  ஆத்திகவாதியான பின்பு ரஜினியின் சூரியமேடு பற்றியெல்லாம் பேசுகிறீர்கள். நான் எதை ஏற்றுக்கொள்வது? உங்களின் 20 வருட சிந்தனைகளை அப்படியே தூக்கிப் போட்டுவிட்டேன். ஆத்திகவாதியாக இப்போது ரஜினி பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன்.

 

படத்தில் வந்த 12ம் நூற்றாண்டு கால காட்சிகளை பழைய படங்களுடன் குறிப்பிட்டு எழுதியிருந்தீர்கள். பழைய படங்களான சந்திரலேகா, ஔவையார், வஞ்சிக்கோட்டை வாலிபன் போன்ற பிரம்மாண்டங்கள் எல்லாம் ஏன் உங்களுக்குத் தெரியவில்லை? அந்த 12ம் நூற்றாண்டு கால காட்சிகளில்தான் படத்தின் கருவே ஆரம்பமாகிறது. அது உங்களுக்கு புரியவில்லை என்று கூறிவிட்டு படத்தைப்பற்றி விமர்சனம் செய்வதும் ஏனோ?

 

படத்தில் அவ்தார் சிங் சம்பந்தமே இல்லாமல் வருவதாகச் சொல்கிறீர். Airportல் இருந்து வில்லன் தப்பித்து வெளியே வருவதற்கு அவ்தார் சிங்தானே காரணமாக காட்டப்படுகிறது.

 

உலக நாயகன் மாதிரி சந்தானபாரதிக்கும் ஒரு நாயகன் பட்டம் தரலாம் என்று சொல்கிறீர். இதற்கு முன்பு சந்தானபாரதி இப்படி வந்த ஏதாவது 4 படங்களின் பெயர்களை  முயற்சித்து சொல்லுங்களேன் பார்க்கலாம்.

 

படத்தில் வரும் அந்த பாட்டியின் பெயர் கிருஷ்ணவேணி; அந்த மணல்கொள்ளையைத் தடுப்பவரின் பெயர் வின்சென்ட் பூவராகன்; (மண்ணின் மைந்தன் எப்படி உங்களுக்கு இடிஅமீன் போல தெரிகிறாரோ?)நீங்கள் சொல்லும் பெயர்களல்ல.

 

கலிஃபுல்லாவின் வாப்பா 'நல்ல காலம், நாம் மசூதியில் இருந்ததால் சுனாமியிலிருந்து தப்பினோம்' என்று கூறியதில் இருந்து நீங்கள் எடுத்துக் கொண்ட உங்களின் (ஓர் இந்துவாய்) அரசியல் பார்வை என்னை ரொம்பவே நெருடுகிறது. அதன் ஒரே அர்த்தம் அவர்களது வீட்டில் அவர்கள் இருந்திருந்தால் அனைவரும் சுனாமியில் சிக்கியிருந்திருப்போம் என்பதே தவிர கோயிலைவிட மசூதிதான் காப்பாற்றும் என்ற இந்துஎதிர்ப்பு அல்ல. மத அடையாளங்களை தூக்கி எறிந்த கமலைப்பற்றி எதற்கு இந்துத்வா, முஸ்லீம் எதிர்ப்பு என்றெல்லாம் பேசுகிறீர்கள் என்று எனக்கு புரியவில்லை.

 

அதுசரி அந்த பல்ராம் நாயுடு பாத்திரத்தைப் பற்றி திட்டிகூட  ஒருவரியும் எழுதவில்லையே; ஏன் நீங்கள் நாயுடுகளின் ஆதரவாளரா... 

 

சாதக மற்றும் பாதக விமர்சனங்களை இரண்டையும் சரியாக எடுத்துக்கொண்டு அடுத்த வேலைகளுக்கு செல்ல முற்படும் கமலைப்போய் ஒரு அரசியல்வாதியான ஜெயலலிதாவிடம் ஒப்பீடு செய்வதிலேயே உங்களின் பார்வை எனக்கு நன்றாகத் தெரிகிறது.

 

கற்பு, ஒருவனுக்கு ஒருத்தி போன்ற காலாவாதியாகிவிட்ட கோட்பாடுகளை தூக்கியெறிந்து விட்டவர் கமல் என்று பாராட்டும்போது நாத்திகனாக இருந்தவர் நீங்கள். இப்போது இராம அவதாரத்தை ஏற்றுக்கொண்ட ஆத்திகரான நீங்கள் கமலைப்பார்த்து உபயோகப்படுத்தக் கூடாத அந்த வார்த்தை narcissism.

 

விமர்சன நாயகனே இதையும் உங்களது வலைதளத்தில் தைரியமாக பதிவு செய்துகொள்ளுங்கள்.

No comments: