Monday, April 14, 2008

வாருங்கள் தோழர்களே, எல்லோரும் இறங்கி சாக்கடையைச் சுத்தம் செய்வோம் - நல்லக்கண்ணு

ஒரு வெள்ளைக்கார அழகியின் ரோஸ் நிற கன்னத்தில் அழகு ததும்பும் மச்சம். இரண்டு கவிஞர்களுக்கிடையில் அந்த மச்சத்தை வர்ணிக்கிற போட்டி.
‘செழித்து வளர்ந்திருக்கும் ரோஜாத் தோட்டத்தில் ஒரு கறுப்பு வண்டு தேன் அருந்துகிறது’ என்றார் வெள்ளைக்காரக் கவிஞர். ‘வெள்ளைக்காரன் தோட்டத்தில் அடிமையாக வேலை செய்தே களைத்துப் போன ஒரு கறுப்பனைப் போல் இருக்கிறது அந்த மச்சம்’ எனச் சொன்னார் கறுப்பர் இனக் கவிஞர்.
வெள்ளைக்காரரின் கற்பனை, அழகியல் உணர்ச்சி. கறுப்பரின் கவிதை, சமூகப் பொறுப்பு உணர்வு!
அரசியல் என்பது ஏணி. அதை வைத்து ஏறவும் செய்யலாம், இறங்கவும் செய்யலாம். சமீபகாலமாகவே நமக்கு இறங்குமுகம்தான். பதவியும் அதிகாரமும் தருகிற போதையில் தமிழக அரசியல் தடுமாறிக்கொண்டு இருக் கிறது. ‘அதிகாரம்தான் எங்களுக்கு முக்கியம்’ என்று கொள்கைகளைக் குப்பையில் தூக்கி எறிய இன்று எல்லாத் தரப்புமே தயார்!
குடும்ப அரசியல், வாரிசு அரசியல், சாதி அரசியல், மத அரசியல், லஞ்ச அரசியல், ஊழல் அரசியல், வன்முறை அரசியல் என்று அரசியலின் ஓட்டைகள் இப்போது அதிகமாகிக்கொண்டே வருகின்றன தோழர்களே!
உலகின் மிகச் சிறந்த, மிகப் பெரிய ஜனநாயக நாட்டுக்குச் சொந்தக்காரர்கள் நாம். சுதந்திர இந்தியாவின் அறுபதாம் ஆண்டினை நெருங்கிவிட்டோம். எனினும், நாம் கனவு கண்ட தேசம் இன்னும் நம் கை கூடவில்லை. காரணம், தொண்டு செய்வதற்கான களமாகப் பார்க்கப்பட்ட அரசியல், இன்று வளம் கொழிக் கிற தொழிலாக மாறியிருக்கிறது. தேர்தல் என்பது இலவசங்களை அள்ளி வீசி இரை தேடும் வேட்டைக் களமாக இருக்கிறது.
சென்னையில் ஒரு கல்லூரியில், சேர்மன் தேர்தலுக்காக ஒரு மாணவன் ஐந்து லட்ச ரூபாய் வரை சாதாரணமாகச் செலவழிக்கிறான். ஜெயித்த மாணவப் பிரதிநிதி, மறுநாளே ஓர் அரசியல் கட்சியின் தலைவரைச் சந்தித்து, அவர் காலில் விழுகிறான். அந்தப் புகைப்படத்தை அவர்களே பத்திரிகைகளுக்கு அனுப்பி வைக்கி றார்கள். எதிர்கால அரசியலைத் தீர்மானிக்க முளைக்கிற இளைய தலைமுறையிடமும் இப்படி ஓர் அநாகரிக அரசியல் கலாசாரம் எப்படி வந்தது?
மாற்று ஆடையை உடுத்த வழியில்லாமல் பாதி ஆடையை உடுத்திக்கொண்டு, மீதி ஆடை யைத் துவைத்த பெண்மணியைப் பார்த்துக் கலங்கி, தானும் அரைநிர்வாணமானார் காந்தி. தன் தாயின் குடியிருப்புக்கு விதிமுறைகளை மீறிக் குடிநீர் இணைப்பு தர முடியாது என்றார் காமராஜர். ரயிலில், சாதாரண வகுப்புக் கட்டணத் தில் பயணம் செய்து மிச்சம் பிடித்த பணத்தில் பாமரர்கள் அறிவு பெற மலிவு விலையில் புத்தகங்கள் அச்சடித்தார் பெரியார். பட்டினியால் துவண்டு போயிருந்த தோழர் ஜீவாவிடம் ஆயிரக்கணக்கில் பணம் இருந்தும் ஒரு டீ குடிக்காமல் இருந்தார். ‘பல தோழர்கள் கட்சிக்காகத் தந்த நிதி இந்தப் பணம். இதில் டீ குடிப்பதற்கு எந்தத் தனிமனிதனுக்கும் உரிமை இல்லை’ என்றார். அவர்களைப் போன்ற உயர்ந்த தலைவர்கள் வழி நடத்திய மக்கள் நல அரசியலை எங்கே தொலைத்தோம்?
குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் திருட்டு உலகை நிர்மாணிக்கவா இத்தனைப் போராட்டங்கள்? இத்தனை தியாகங்கள்? அரசியல், பண்பாடு, இலக்கியம் எல்லாவற்றிலும் பழம்பெருமை பேசுவதாகவே ஒரு தேசம் இருப்பது துரதிர்ஷ்டமானது. இப்படியே போனால், அடுத்த தலைமுறை நம் நிகழ்கால அரசியலைப் பற்றி என்ன பேசும்? சுயநலங்களுக்காக நாட்டை, மக்களை, பதவிகளை விலை பேசிய வர்களாக வருங்காலம் நம்மைக் குற்றம் சாட்டினால், என்ன பதில் வைத்திருக்கிறோம்?
ஓர் அரசியல் இயக்கத்தின் அடிமட்டத் தொண்டனாக இருந்து, அந்தக் கட்சியின் தேசியத் தலைவராக வளர்ந்து, இந்தியாவின் பிரதமரையே தீர்மானிக்கிற நிலைக்கு உயர்ந்தார் படிக்காத மேதை காமராஜர். சினிமாவில் நடித்ததை மட்டுமே தகுதியாகக் கொண்டு இன்று மக்கள் பிரதிநிதியாக, முதலமைச்சர் ஆகிவிடத் துடிக்கிறார்கள். இன்றும் வரலாறாக வாழ்கிற பெரியார், சட்டமன்ற உறுப்பினராக வேண்டுமென்று ஆசைப்பட்டதில்லை. அரசுக் குத் தலைமையேற்பது எவ்வளவு பொறுப்புள்ள காரியம் என்பது இப்போது ஆள்பவர்களுக்கும் தெரியவில்லை; ஆள நினைப்பவர்களுக்கும் தெரியவில்லை. கட்டுகிற வேட்டியில் கரை இருக்கலாம்; மனதில் கறை இருக்கலாமா?
தகுதி அடிப்படையில் இல்லாமல், சாதி வாரியாகத் தொகுதிகள் ஒதுக்கப்படுகின்ற அவலம் நடக்கிறது. அமைச்சர் பதவி முதல் பல்கலைக்கழக துணைவேந்தர் பதவி வரை எல்லாவற்றையும் தீர்மானிப்பது சாதி அரசியல் தான்.
கார்கில் யுத்தத்தில் நாட்டைக் காப்பதற்காகப் போராடிய ராணுவ வீரர்களுக்குச் செய்யப்பட்ட சவப் பெட்டி யிலும் ஊழல் என்று புகார் எழுந்தபோது தலை கவிழ்ந்து நின்றது அரசியல்.
மக்களின் பிரச்னைகளை நாடாளுமன்றத்தில் குறைந்த பட்சம் பேசவாவது செய்வார் கள் என்று எதிர்பார்ப்போடு மக்கள் தேர்ந்தெடுத்த நாடாளு மன்ற உறுப்பினர்கள் கேள்வி கேட்கவே லஞ்சம் வாங்கியது தெரிந்த போது கூசிக் குறுகி நின்றது அரசியல்.
குஜராத், கோத்ரா கலவரத்தில், ஒரு கர்ப்பிணியின் குடலைக் கிழித்து உள்ளிருந்த சிசுவைக் கொன்று வெற்றிக் களிப்பில் சிலர் திக்குமுக்காடியபோது அகோரமாகக் காட்சி அளித்தது மதவெறி அரசியல்.
எங்கே நடந்தது தவறு? மரியாதைக்குரிய தலைவர்கள் குறிக்கோளுக்காகச் சொன்னதை நாம் மேற்கோளுக்காக மட்டுமே பயன்படுத்த ஆரம்பித்தது ஏன்?
‘பசி, பிணி, பகை மூன்றும் இல்லாமல் இருந்தால் தான் அது நாடு’ என்கிறார் வள்ளுவர். அத்தகைய நாட்டை உருவாக்க வேண்டியது அரசை ஆள்பவர் களின் கடமை. அதை அரசியல்வாதிகளிடம் எதிர் பார்ப்பதும், இல்லாமல் போனால் போராடுவதும் மக்களின் உரிமை.
ஒழுகாத வீடு, கிழியாத உடை, சூடான உணவு இந்த மூன்றும் ஒரு மனிதனின் அடிப்படைத் தேவை. அதைச் சாதாரண குடிமகனுக்கும் உருவாக் கித் தருகிற சமூகப் பொறுப்பு அரசியல் வாதிகளுக்கு உண்டு.
அரிசி விலை ஏறிக் கொண்டே போவதும், கார் விலை குறைந்து கொண்டே வருவதும் ஆரோக்கியமான நாட் டுக்கு நல்ல அறிகுறியே அல்ல! ஏழைகள் மேலும் ஏழைகளாகவும், பணக் காரர்கள் மேலும் பணக் காரர்களாகவும் இருந்தால் ஆட்சியாளர்கள் சுயநலங் களுடன் இருக்கிறார்கள் என்று அர்த்தம்.
‘தேனாறு பாயுது, செங் கதிரும் சாயுது, ஆனாலும் மக்கள் வயிறு காயுது’ என்கிற வேதனை யாருக்கும் இல்லாமல் போனதால்தான் வயலுக் குத் தெளிக்க வேண்டிய பூச்சி மருந்தை குடும்பத் தோடு அருந்தி உயிரை மாய்த்துக்கொள் கிறார்கள் உழவர்கள். இந்த தேசத்துக்கே சோறு போடுகிறவனுக்கு நத்தை கள்தான் உணவு. நாலு ரூபாய் ரேஷன் அரிசி வாங்க முடியாமல் பட்டினி கிடப்பவர்கள் தங்கள் தாகத்தைத் தீர்க்க பத்து ரூபாய் குளிர்பானம் அருந்தவேண்டுமாம். என்ன கொடுமை இது! கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஒரு ஏவுகணை தயாரிக்கிற செலவில் ஒரு மாநிலத் துக்கான அடிப்படைக் கல்வியை எல்லோருக்கும் வழங்கிவிட முடியும் என்பது, எப்போது நம் புத்தியில் உறைக்கப் போகிறது!
‘ஐந்து அப்பங்கள், இரண்டு மீன்களைக் கொண்டு ஐயாயிரம் நபர்களுக்கு உணவு படைத்தார் ஏசு’ என்கிறது பைபிள். இன்று ஐயாயிரம் நபர்களுக்குரிய அப்பங்களையும், மீன்களையும் ஐந்தே அரசியல்வாதிகள் பங்கிட்டுக்கொள்கிறார்கள். வேரில் விஷமேறிவிட்டால் கனிகளும் அப்படித் தான் இருக்கும். ஒரு சமூகத்துக்கு அரசியல்தான் ஆணிவேர். அரசியல் அசிங்கமானால் நாடே அசிங்கமான தாகத்தான் அர்த்தம்.
வாருங்கள் தோழர்களே, எல்லோரும் இறங்கி சாக்கடையைச் சுத்தம் செய்வோம். அதை யாராவது செய்வார்கள் என்று இருந்துவிடாமல், சமூகம் அசிங்கமானதற்கு நானும் ஒரு காரணம் என்று மனமுவந்து நம் தவறுகளை ஏற்றுக்கொள்வோம்.
ஜனநாயக நாட்டில் ஆட்சியாளர்கள் என்பவர்கள் மக்களிடமிருந்து மக்களால் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள். தகுதியால் இல்லாமல் பிறப்பால் ஒருவர் அரசியல்வாதியாக முயற்சி செய்தால், கொள்கைகளை மறந்து கொள்ளையடித்தால், அதிகார போதையில் மக்களை மறந்தால் அவர்களைத் தூக்கியெறிய, வாக்குரிமை என்கிற வலுவான ஆயுதம் நம் ஒவ்வொரு வரிடமும் இருக்கிறது.
ஜனநாயகத்தில் மக்கள்தான் கண்ணாடி. அவர்கள் எப்படி இருக்கிறார்களோ அப்படித்தான் அரசியலும் இருக்கும்.
பிரச்னை நம்மிடம்தான் இருக்கிறது. வருங்காலத் தலைமுறைக்கு நல்ல ஆரோக்கியமான அரசியலை அறிமுகப் படுத்துவோம். இலவசங்களிலும், அன்பளிப்புகளிலும் ஏமாந்தது போதும். ஒருமுறை வாக்குப் பிச்சை போட்டுவிட்டு ஐந்தாண்டுகளுக்கு வாழ்க்கைப் பிச்சை எடுப்பதை இனியாவது நிறுத்துவோம். நேர்மையும், உண்மையும் அரசியலின் இரண்டு பக்கங்களாகும்போதுதான் நாம் கனவு காண்கிற சமத்துவமுள்ள நாட்டை உருவாக்க முடியும்.
இனியும் நாம் இழப்பதற்கு ஒன்றுமில்லை. மீட்பதற்கோ ஒரு சொர்க்கமே இருக்கிறது. நம் எதிர்காலத்தைத் தீர்மானிக்க, நமக்கான உலகத்தை உருவாக்க... வாருங்கள் தோழர்களே,
நன்றி விகடன்

No comments: