Tuesday, April 8, 2008

ஈ.வெ.ராமசாமி Vs மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி

மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி
திருப்புமுனை இடம் - தென்னாப்பிரிக்கா
கோபத்திற்கு காரணம் - வெள்ளையர், கறுப்பினர் என்கிற நிற வேறுபாடு
ஒரு நாள் ப்ரிட்டோரியா (Pretoria) செல்வதற்காக தகுந்த பயனச்சீட்டுடன் இரயில் வண்டியின் முதல் வகுப்புப் பெட்டியில் பயனம் செய்த காந்தி,அவர் ஒரு வெள்ளையர் இல்லை என்ற காரணத்திற்காக, ஆங்கிலேய அதிகாரி ஒருவரால் பீட்டர்மாரீஸ்பர்க் (Pietermaritzburg) இரயில் நிலையத்தில் பெட்டியிலிருந்து தூக்கி எறியப்பட்டார். வெள்ளையர் அல்லாத ஒரே காரணத்தால் இது போன்று பல இன்னல்களை காந்தி அனுபவித்தார். இதன் மூலம் தென்னாப்பிரிக்காவின் கறுப்பின மக்களும் அங்கே குடியேறிய இந்தியர்களும் படும் இன்னல்களை காந்தி நன்குணர்ந்தார். அரசியல் ஈடுபாடில்லாது தன்னையும் தன் குடும்பத்தையும் மட்டுமே கவனித்து வந்த இளைஞராயிருந்தார் காந்தி. தென்னாப்பிரிக்காவில் அவருக்கேற்பட்ட அனுபவங்கள், பின்னாளில் அவரை ஒரு மாபெரும் அரசியல் சக்தியாக உருவாக்க உதவியது. நிற வேறுபாடு பார்க்கும் வெள்ளையர்களை இந்தியாவிலிருந்தே வெளியேற்ற வேண்டும் என்ற எண்ணமும் வந்தது.

ஈ.வெ.ராமசாமி
திருப்புமுனை இடம் - காசி
கோபத்திற்கு காரணம் - பார்ப்பனர், சூத்திரர் என்கிற ஜாதி வேறுபாடு
தந்தையாரின் கடுமையான கண்டனத்தால் இவர் குடும்பத்தையே துறந்தார். முதலில் ஆந்திரா மாநிலத்தில் உள்ள விஜயவாடா நகருக்குச் சென்றார். அய்தராபாத், கோல்கத்தா நகரங்களுக்குப் போனார். கங்கை ஆற்றின் கரையில் உள்ள இந்துக்களின் புனித நகரமான காசி நகரை (வாரணாசி) இவர் அடைந்தார். அங்கோ அன்ன சத்திரங்களில் இந்து மதத்தின் மற்றச் ஜாதியினர்க்கு அனுமதி மறுக்கப்பட்டுப் பார்ப்பனர்க்கு மட்டுமே தனிமதிப்புடன் உணவு வழங்கப்பட்டதால், திராவிட இனத்தவரான இவரால் எளிதாகச் சத்திரத்து இலவச உணவைப் பெற முடியவில்லை.சில நாள்கள் மிகக் கடுமையாகப் பட்டினியால் வாடிய இந்த எழில் தோற்றம் உள்ள இளைஞர் இராமசாமி, வேறு எந்த நேரிய வழியும் தோன்றாத நிலையில், ஓர் அன்ன சத்திரத்தில் நுழைவதற்கு முயன்றார். ஆனால் இவரது கரிய மீசை காட்டிக் கொடுத்துவிட்டது. எனவே, வாயில் காவலாளி சத்திரத்திற்குள் இவர் நுழைவதைத் தடுத்ததுடன், முரட்டுத்தனமாகத் தெருவிலே இவரைத் தள்ளிவிட்டான்.அந்த நேரம், சத்திரத்தின் உள்ளே விருந்து முடிந்து விட்டதால், எஞ்சிய சோற்றுடன் எச்சில் இலைகள் தெருவிலே வீசி எறியப்பட்டன. கடந்த சில நாள்களாக வாட்டிய கடும் பட்டினியோ, அந்த எச்சில் இலைச் சோற்றைத் தெரு நாய்களுடன் போட்டியிட்டுத் தின்பதற்குக் கட்டாயப்படுத்தியது இராமசாமியை.அவ்வாறு அந்தச் சோற்றைத் தின்னும்பொழுதே சத்திரத்தின் வெளிப்புறச் சுவரில் பொறிக்கப்பட்ட எழுத்துகளை இவர் விழிகள் பார்த்தன. அவையோ இந்த உண்மையை வெளிப்படுத்தின: தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு பணக்கார வணிகரான திராவிட இனத்தவரே அந்தச் சத்திரத்தைக் கட்டியவர். ஆயினும், மிக உயர்ந்த ஜாதியாரான பார்ப்பனர், தங்களுக்கு மட்டுமே தனி உரிமை கொண்டதாக அதில் குடியேறிவிட்டனர்; இலவச உணவு உண்டனர்.திடீரென்று இந்த இளைஞரின் மனத்தில் சில கேள்விகள் தீப்பொறிகளாகத் தெறித்தன. “ஒரு திராவிட அறப்பணியாளர் பணத்தில் கட்டப்பட்ட சத்திரத்தில் திராவிட இனத்தவர் உணவு அருந்துவதைப் பார்ப்பனர் தடுப்பது ஏன்? திராவிடரைப் பட்டினிச் சாவுக்கே தள்ளும் அளவுக்குத் தங்களின் கொடுமையான ஜாதி முறையை விடாப்பிடியாகக் கட்டாயமாக நடைமுறைப்படுத்துவதற்காக இவ்வளவு இரக்கம் இல்லாமலும் மதவெறியோடும் பார்ப்பனர் நடந்து கொள்ள வேண்டுமா?”இந்த வினாக்களுக்கு உரிய நியாயமான விடைகள் பெரியாரின் அறிவுக் கூர்மையான சிந்தனைக்குக் கிடைக்கவில்லை.காசியில் துளி அளவும் இரக்கம் அற்றுப் பார்ப்பனர் இழைத்த அவமானம் பெரியார் உள்ளத்தில் ஆழமான காயத்தை உண்டாக்கிற்று. அதுவே ஆரிய இனத்தின் மீதும் அவர்களின் படைப்புகளான கணக்கற்ற கடவுள்கள் மீதும் அழுத்தமான வெறுப்பு நெருப்பைக் கொழுந்துவிட்டு எரியச் செய்தது.மிக உயர்ந்த ‘புனித நகரம்’ ஆகப் பார்ப்பனரால் போற்றப்படுவதுதான் காசி என்னும் வாரணாசி. ஆயினும் அங்கே காணப்பட்ட மிகமிக அருவருப்பான ஒழுக்கக்கேடான நடவடிக்கைக் காட்சிகளும், பரத்தைத் தொழிலும் (விபச்சாரமும்), ஏமாற்றுதலும், பகற்கொள்ளையும், கெஞ்சிப் பிச்சை கேட்கும் கூட்டங்களும், கங்கை ஆற்றில் மிதந்து செல்லும் பிணங்களும் புனித நகரம் என அழைக்கப்படும் அந்தக் காசியை வெறுக்கும்படியாகவே பெரியாரைத் தூண்டின.
பார்ப்பனரால் அடக்கிச் சீரழிக்கப்பட்ட திராவிட இனம் விடுதலை பெறுவதற்குப் போராடும் ஒரு சமுதாயப் புரட்சி இயக்கம் என்பதைச் சிறப்பித்துக் குறிக்க ‘திராவிடர் கழகம்’ என்ற இயக்கத்தை நடத்தினார் பெரியார்.

No comments: