Monday, October 27, 2008

ஜோதிடருக்கு வந்த கேள்வி - பதில்கள் - 1

`குமுதம் ஜோதிடம்' 31.10.2008 தேதியிட்டஇதழில் அதன் ஆசிரியர் ஜோதிடர்
ஏ.எம்.ஆர். அளித்த கேள்வி - பதில்கள் :
திரு. அழகேசன்,மணச்ச்நல்லூர்.
கேள்வி :
சில மாதங்களுக்கு முன்பு என் உடல்நிலை பற்றிய பிரச்சினையைக் குறிப்பிட்டு தங்களுக்குக் கடிதம் எழுதியிருந்தேன். தாங்களும் `குமுதம் ஜோதிடம்' இதழில் என் ஜாதகத்தைக் கணித்துப் பதில் கூறியிருந்தீர்கள். அதற்கு நன்றி. தாங்கள் குறிப்பிட்டுள்ள பரிகாரத்தைச் செய்து வருகிறேன். இதுவரை எனது சருமநோய் குணமடையவில்லை. மேலும் நான் என்ன செய்யவேண்டும்? என்னிடம் உண்மையான பக்தி இல்லையோ என்று எண்ணத் தோன்றுகிறது.
பதில் :
தங்கள் ஜாதகப்படி, தங்களுக்கு ஏற்பட்டுள்ள சரீர சம்பந்தமான நோய் பூரண குணமடைவது கடினம் என்பதையும், நாங்கள் கூறிய பரிகாரம் தங்கள் தோல் வியாதி மேலும் பரவாமலிருப்பதற்கு மட்டுமே உதவும் என்பதையும் எங்கள் பதிலில் தெளிவாகக் கூறியிருந்தோம்.
தங்கள் ஜாதகத்தின் கிரகநிலைகளின்படி இந்தச் சரும வியாதி பூரண குணமடைவதற்கு வாய்ப்பு மிகவும் குறைவு. இருப்பினும், திங்கட்கிழமைகளிலும், பௌர்ணமியன்றும் அங்குள்ள திருக்கோயிலொன்றில் மாலையில் நெய்தீபம் ஏற்றி வாருங்கள். தங்களுக்கு ஏற்பட்டுள்ள சரும நோய்க்கு மிகச் சிறந்த பரிகாரம் இது. பதினெட்டு மாதங்களுக்குச் செய்து வருவது நல்லது.
தங்களுக்கு உண்மையான பக்தி இல்லை என்று தாங்களாகவே நினைத்துக்கொள்ள வேண்டாம். நோயின் கடுமையினால் மனம் தளர்ந்து இவ்விதம் கூறியிருக்கிறீர்கள். இறைவனிடம் நம்பிக்கை வைத்து, நாங்கள் கூறியுள்ள பரிகாரத்தைச் செய்து வரவும். அவன் திருவுள்ளத்தில் நினைத்துவிட்டால் முடியாதது என்று எதுவுமில்லை.
திரு. வி.ஆர்.,சென்னை-17.
கேள்வி :
எனது மகன் பி.எஸ்ஸி., கம்ப்யூட்டர் சயின்ஸ் 2006_ம் ஆண்டில் முடித்து, கேம்பஸ் இன்டர்வியூவில் தேர்வு செய்யப்பட்டு நல்ல வேலையும் கிடைத்தது. ஆனால் ஆறு மாதங்களிலேயே வேலை செய்ய முடியவில்லை என்று சொல்லி வேலையிலிருந்து நின்றுவிட்டான். அதன் பிறகு வேலைக்குச் செல்லாமலும் மேலே படிப்பதற்கு விருப்பமில்லாமலும் இருந்து வருகிறான். வெளியில் செல்வது இல்லை. டி.வி. பார்த்துக்கொண்டு, வீட்டிலேயே முடங்கிக் கிடக்கிறான். ஜோதிடர்களிடம் காட்டியதில் தீய சக்தியின் பாதிப்பு உள்ளதெனக் கூறுகிறார்கள். அதற்கான ஹோமங்கள், பூஜைகள் ஆகியவற்றைச் செய்தும் பலன் எதுவும் தெரியவில்லை.
நாங்கள், தாங்கள் எழுதியுள்ள திருமால்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர்கள். எனது தந்தை 1970 முதல் 1975 வரையில் இக்கோயிலின் தர்மகர்த்தாவாக இருந்ததுடன், இக்கோயிலுக்கு முதன்முறையாக மின்சார விளக்குகளும் அமைத்துக்கொடுத்தவர். என் பிள்ளையின் பிரச்சினை தீர வழி கூறும்படி வேண்டுகிறேன்.
பதில் :
தங்கள் கடிதத்தைப் படித்து மிகவும் வேதனை அடைந்தோம். தங்கள் பிள்ளையின் ஜாதகப்படி 2009 மே மாதம் 17-ம் தேதிக்குப் பிறகு தங்கள் மகனின் மனநிலையில் நல்ல மாற்றங்கள் தெரியும். 2010 ஆகஸ்ட் 9-ம் தேதிக்குப் பிறகு பூரண குணம் ஏற்பட்டு, வேலைக்கும் தவறாமல் செல்வார். தினமும் காலையில் ஸ்ரீ லட்சுமிநரசிம்மரின் மந்திர ராஜபத ஸ்தோத்திரமும், மாலையில் ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமமும் சொல்லி வரவும். நல்ல பலன் தெரியும். சற்று பொறுமையாக இருக்கும்படி வேண்டுகிறோம்.
திரு. கே.எஸ்.,பெங்களூரு.
கேள்வி :
எங்களுக்கு 2003-ம் ஆண்டு திருமணம் நடந்தது. என் மனைவி விவாகரத்து பெற்றவள். இதுவரை புத்திர பாக்கியம் ஏற்படவில்லை. நாங்கள் இருவரும் ஒருவரையொருவர் விரும்பித்தான் திருமணம் செய்துகொண்டோம். தற்போது தினமும் சண்டை போடுகிறாள். என்னைக் கண்டாலே வெறுப்புடன் பேசுகிறாள். காரணமில்லாமல் கோபப்படுகிறாள்.
அவளிடம் ஏற்பட்டுள்ள இந்தத் திடீர் மாறுதல் கண்டு செய்வதறியாது கஷ்டப்பட்டு வருகிறேன். அவளது ஜாதகத்தில் என்ன கோளாறு உள்ளது? அவளுக்கு எவராவது செய்வினை செய்திருக்கிறார்களா? அவ்விதமிருப்பின் அதற்கு என்ன பரிகாரம் செய்யவேண்டும்?
பதில் :
தங்கள் மனைவிக்குச் செய்வினை தோஷம் எதுவும் செய்யப்படவில்லை. தங்கள் ஜாதகத்தில் சற்று கடினமான தோஷங்கள் இருப்பதால், தங்கள் மனைவிக்குத் தங்கள் மீது வெறுப்பு ஏற்பட்டு வருகிறது. திருமணத்திற்குப் பின்புதான் அந்த தோஷங்களின் விளைவை தங்கள் மனைவியால் அறிந்துகொள்ள முடிந்தது.
கிரகநிலைகளின்படியும், தசா, புக்திகளின்படியும் தங்கள் மனைவி தங்களுடன் சேர்ந்து வாழ்வதற்குச் சாத்தியக்கூறு இல்லை. பரிகாரத்திற்கு மீறிய தோஷமாகும் இது. ஆதலால் எங்களால் பரிகாரம் எதுவும் கூற இயலவில்லை. மன்னிக்கவும்.
திருமதி. ஆர். விஜயலட்சுமி,மதுரை.
கேள்வி :
எனது பெண் தற்போது பி.ஈ., கடைசி வருடம் படித்து வருகிறாள். கம்பெனி ஒன்றின் கேம்பஸ் இண்டர்வியூவில் கலந்துகொண்டு வேலைக்குத் தேர்வு பெற்றிருக்கிறாள். ஆனால், அவள் மேலும் எம்.ஈ., இரண்டாண்டு படித்து கல்லூரி வேலைக்குச் செல்ல விரும்புகிறாள். அவளது ஜாதகப்படி, அவள் படிப்பதற்கு யோகமுள்ளதா? அல்லது வேலைக்குச் செல்வது நல்லதா என்று கூறும்படி வேண்டுகிறேன்.
பதில் :
தங்கள் மகளின் ஜாதகப்படி, வேலைக்குச் செல்வதே அவரது எதிர்காலத்திற்கு நன்மை அளிக்கும்.
திரு. எஸ். வெங்கட்ராமன்,சென்னை-4.
கடிதம் :
அந்நிய மதங்களின் அதர்மச் செயல்களால் இந்து சமுதாயத்தின் இன்றைய அவல நிலையைக் கண்டு மனமுடைந்து தாங்கள் எழுதியுள்ள தலையங்கங்கள் என்னையும், எனது நெருங்கிய நண்பர்களையும் உலுக்கியுள்ளது. ஆதலால், இறையருளை முன்னிறுத்தி இந்த வருட விஜயதசமி தினத்தில் `சனாதன சேவா சத்சங்கம்' எனும் அமைப்பினை எனது நண்பர்களுடன் சேர்ந்து ஆரம்பித்து உள்ளேன். தங்களின் கொல்லிமலை மதமாற்றம் பற்றிய கட்டுரையே இந்த அமைப்பை ஆரம்பிக்கத் தூண்டியது. `நம் சிறுவர்கள், நம் திருக்கோயில்களின் பெருமைகளை உணர்ந்துகொள்ள வேண்டும்; நம் வாழ்க்கை நெறிமுறையின் சிறப்பை அறிந்துகொள்ள வேண்டும்; நமது இளைஞர்கள், பெண்களை சிறு வயதிலிருந்தே சமயப்பற்று உள்ளவர்களாக வளர்க்கவேண்டிய பொறுப்பைப் பெற்றோர்கள் உணர்ந்துகொள்ள வழிவகுக்க வேண்டும் ஆகியவையே எங்களது இந்த அமைப்பின் நோக்கங்களாகும்.
மதமாற்றத்தைத் தடுப்பதும் எங்கள் முக்கிய நோக்கமாகும். இத்தகைய நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பு. என் ஜாதகப்படி இந்து சமுதாயத்திற்கு என்னால் முழுமையாக உதவ முடியுமா?
பதில் :
நிச்சயமாக முடியும் எனத் தங்கள் ஜாதகம் எடுத்துக்காட்டுகிறது. இத்தகைய முயற்சிகளுக்குக் கடுமையான சோதனைகள் ஏற்படும். அவை அனைத்தையும் தைரியமாக எதிர்த்துப் போராட வேண்டும். இந்துக்களிடையே தீவிர சமயப் பற்றை ஏற்படுத்த வேண்டும். இவை அனைத்திற்கும் தளராத மனஉறுதி அவசியம். ஆர்வத்துடன் ஆரம்பித்துவிட்டு பின்பு பாதியில் மனம் தளர்ந்து பின்வாங்குவது கூடாது. இன்று இந்து சமயத்திற்கு இதுவரை ஏற்பட்டிராத அளவிற்குச் சோதனைகள் ஏற்பட்டு வருகின்றன.
முகலாயர்களின் படையெடுப்பின்போது இந்து மதத்தை அடியோடு அழிக்க வேண்டுமென்று உறுதியான நோக்கத்தோடு படையெடுத்து வந்தவர்களால் நமக்கு விபரீதமான சோதனைகள் ஏற்பட்டன. ஆனால் இன்றோ, இந்துத் தாய்க்குப் பிறந்தவர்களே தங்கள் தாய்மதத்திற்குத் துரோகம் செய்து வருவதை எதிர்ப்பதற்கு எத்தகைய தியாகத்தையும் செய்யும் மனஉறுதி மிகவும் அவசியம். இவற்றை மறவாதீர்கள். தங்கள் ஜாதகத்தின் கிரகநிலைகளின்படி இந்து சமுதாயத்திற்குத் தங்கள் அமைப்பினால் முழுமையாக உதவமுடியும்.

1 comment:

karthick said...

NAME : karthick KUMAR
DOB : 31.10.1988
TIME : 06.44 AM
PLACE OF BIRTH: PATTUKKOTTAI, TAMILNADU


1.நான் இப்போது வேலை இல்லாமல் உள்ளேன். எப்போது வேலை கிடைக்கும்.? .தனியார் துறையில் அல்லது அரசு துறையில் ?என் ஜாதகப்படி என் எதிர்காலம் எப்படி இருக்கும்.?