Tuesday, April 8, 2008

'மாற்றம் ஒன்றுதான் மாறாதது' என்கிற தத்துவம்கூட தோற்றுப்போனது சாதியிடம் மட்டுந்தான் - தொல்.திருமா

‘‘நீங்கள் இந்தக் குளத்துக்கு விடுதலை வேண்டும் என்கிறீர்கள், இந்தக் குளத்தில் எங்கள் மக்கள் குளிக்க முடியாது. நீங்கள் இந்தக் கிணற்றுக்கு விடுதலை வேண்டும் என்கிறீர்கள், இந்தக் கிணற்று நீரை எம் மக்கள் உயிர் போகும்போதுகூட தாகத்துக்கு அருந்த முடியாது. நீங்கள் இந்தச் சாலைக்கு விடுதலை வேண்டும் என்று கேட்கிறீர்கள், எங்கள் மக்களின் பிணங்கள்கூட இந்தச் சாலை வழியாகப் போக முடியாது. முதலில் எங்களுக்குச் சமூக விடுதலை கிடைக்கட்டும்!’’ & இந்தியா விடுதலை அடைவதற்கு முன் அண்ணல் அம்பேத்கர் சொன்ன இந்த வாக்கியங்கள் இன்னமும் அதன் அர்த்தம் இழக்காமலேயே இருக்கிறது நம் தேசத்தில்!

‘மாற்றம் ஒன்றுதான் மாறாதது!’ என்கிற தத்துவம்கூட தோற்றுப்போனது சாதியிடம் மட்டும்தான். உலகமே கிராமமாகி வரும் சூழலிலும் நாம் சாதியின் முன் மண்டியிட்டுக் கிடக் கிறோம் நண்பர்களே. பள்ளியில், வீட்டில், விசேஷங்களில், அலுவலகங்களில், தோழமையில், திருமணத்தில், சுடுகாட்டில்... இப்படி ஜனனம் முதல் மரணம் வரை நம்மைத் துரத்துகிறது சாதி.
‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்று சமத்துவம் பேசுகிறது வள்ளுவம். ‘உன் பிறப்பே அவமானகரமானது, நீ வாழத் தகுதியற்றவன்’ என்கிறது தமிழகத்தில் சாதியம். பாப்பாபட்டியும் கீரிப்பட்டியும் அதன் அடையாளங்கள்... அவமானங்கள்!
அரசும் அதிகாரவர்க்கமும் மக்களைக் காப்பாற்றுவதைவிட சாதியைக் காப்பாற்றுகிற கடமையையே செய்கின்றன. ‘வீரன் சுந்தரலிங்கம்’ இந்த நாட்டின் விடுதலைக்காகப் போராடிய தளபதியாக இருக்கலாம். ஆனால், தீண்டக் கூடாத சாதியில் பிறந்தவனின் பெயரை உயர்சாதி மக்கள் பயணிக்கிற பேருந்துகளுக்கு வைத்தாலே தீட்டு வந்துவிடுகிறதே? அதற்காக நாடு முழுவதும் கலவரம் நடக்கிறதே? இறுதியில் எல்லாத் தலைவர்களின் பெயர்களையும் எடுத்துவிடுகிறோம்’ என்று சாதியத்துக்கு அடிபணிந்து போகிறது அரசு.
‘கூலியை உயர்த்திக் கொடு’ என்று உழைப்பவர்கள் கேட்டதைப் பொறுக்க முடியாமல் 44 பேரை உயிரோடு வைத்து எரித்த தீயில் கோரமாய் எழுந்து நின்று பல்லிளித்துச் சிரித்தது அன்று சாதி. உலகின் மிகச்சிறந்த ஜனநாயக நாடான இந்தியாவின் தேர்தல் ஆணையத் தாலேயே, தமிழகத்தில் இன்னும் ஐந்து பஞ்சாயத்துகளில் தேர்தலை நடத்த முடியாமல், இன்றும் சவால்விடுகிறது அதே சாதி!
நமது தேசத்தின் முதுகெலும்பாக இருக்கும் கிராமங்களின் நன்செய், புன்செய் நிலங்களிளெல்லாம் சாதியே விதைக்கப்பட்டிருக்கிறது. ‘ஒருவன் பல்லக்கில் ஒய்யாரமாக உட்கார்ந்து வருவதற்கும், அவனை காடு, மலை, பள்ளத்தாக்குகளில் ஒரு கூட்டம் தூக்கிச் சுமப்பதற்கும் பிறப்பே காரணம்’ என்கிறது சாதியம்.
குரங்கிலிருந்து வந்தவன் மனிதன் என்கிறது அறிவியல். குரங்குகளில் சாதி இல்லை. ஆனால், இங்கே ஒவ்வொரு மனிதனும் சாதி எனும் அசிங்கத்தை குற்ற உணர்வு இல்லாமல் சுமக்கிறான். தனது பெயருக்குப் பின்னால், தன் சாதியின் பெயரை எழுத இங்கே யாருக்கும் வெட்கமில்லை.
‘தீண்டாமை ஒரு பெருங்குற்றம்’ என்று பாடப்புத்தகங்களில் எழுதி வைத்துவிட்டால் தீண்டாமை ஒழிந்துவிடுமா? கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே தோன்றிய மூத்தக் குடியில் இன்றைக்கும் இரட்டைக் குவளை பாகுபாடு இருக்கிறது. சக மனிதனை மலம் அள்ளவைத்துவிட்டு அதற்குரிய குற்ற உணர்வு இல்லாமல் ‘ஷாப்பிங்’ போக நாம் தயாராகவே இருக்கிறோம்.
ஒரு குலத்துக்கு ஒரு நீதி என்கிற சாதியம், ஆரம்பத்தில் எல்லோருக்கும் கற்பிக்கப்பட்டது. பின்னர் திணிக்கப் பட்டது. இந்தியாவில் பிறந்த ஒருவன், தான் பிறந்த மதம் தனக்குப் பிடிக்கவில்லை என்றால் வேறொரு மதத்துக்கு மாறிவிட முடியும். சட்ட திட்டச் சடங்குகளால் இறுகிக்கிடக்கும் மதத்தைக்கூட ஒருவன் கடந்து வர முடியும். ஆனால், தான் பிறந்த சாதி தனக்குப் பிடிக்க வில்லையென்றால், அந்தச் சாதியில் இருந்து வெளியேற முடியாது. இங்கே பிறக்கிற ஒவ்வொரு குழந்தையின் மீதும் பெரியவர்கள் சாதியை எடுத்து அப்பி விடுகிறார்கள். மனிதனாகப் பிறக்க வேண்டிய குழந்தைகள் பிராமணராக, நாடாராக, தேவராக, பிள்ளையாக, பள்ளராக, பறையராக, சக்கிலியராகவே பிறக்கிறார்கள். செருப்புத் தைக்கிற குடியில் பிறந்தாலும், திறமையும் உழைப்பும் இருந்தால் நாட்டின் ஜனாதிபதி ஆக அமெரிக்காவில் பிறந்த ஆப்ரகாம் லிங்கனால் முடியும். இங்கே செருப்புத் தைக்கிற சாதியில் பிறந்த ஒரு குழந்தை, காலில் செருப்புகூட போட முடியாது என்றால், இது என்ன நியாயம் நண்பர்களே!
‘இந்தக் காலத்துல சாதியெல்லாம் யாருப்பா பார்க்கிறா?’ என்று வேதாந்தம் பேசுகிற சகோதரர்களின் கவனத்துக்கு... செய்தித்தாள்களில் வருகிற, ‘மணமகள், மணமகன் தேவை’ விளம்பரங்களைப் பாருங்கள்... ‘இன்ன சாதியில், இன்ன உட்பிரிவில், இன்ன கிளைப்பிரிவில்’ உள்ளவர்களையே தன் இணையாகத் தேர்வு செய்ய பகிரங்கமாக விளம்பரம் செய்கிற எம்.சி.ஏ., எம்.பி.ஏ. பி.இ. எம்.பி.பி.எஸ்.கள் நிறைய இருக்கிறார்கள் நம் தமிழ் மண்ணில்!
கிராமங்களின் எல்லாத் திசைகளிலும் சாதியின் முட்கள். இந்திய வரைபடத்தில் இருக்கிற கிராமங்களின் எண்ணிக்கையை அப்படியே இரண்டு மடங்காகக் கணக்கிடலாம். காரணம், பாரம்பரியம் பேசும் பழைமை போற்றும் ஒவ்வொரு கிராமத்துக் குள்ளும் இன்னொரு கிராமம் அவமானத்தில் கிடக்கிறது. எல்லா ஊருக்குள்ளும் ஒரு சேரி இருக்கிறது. பேருந்து நிறுத்தம், அஞ்சலகம், வங்கி, மருத்துவமனை என எல்லாமே மேல்சாதி மக்கள் வசிக்கிற இடங்களில் இருக்கும். அவ்வளவு ஏன்? எல்லோரையும் காக்கிற கடவுள்கூட மேல்சாதி மக்களின் வீட்டுக்கருகில்தான் இருக்கிறார். அவர் அமர்ந்து உலா வரும் தேர்கூட சேரியின் பக்கம் வராது!
ஒருவனுக்கு விதிக்கப்பட்ட சாதிக் கட்டுப் பாட்டுக்கு பணியாவிட்டால், எதிர்க் குரல் எழுப்பினால், அவன் வாயில் மலம் கரைத்து ஊற்ற, சிறுநீரைக் குடிக்கவைக்க இங்கே ஒரு கூட்டம் இருக்கிறது. இறந்துபோன மாட்டின் தோலை உரித்துவிட்டார்கள் என்று தாழ்த்தப்பட்ட சகோதரர்களை அடித்துக் கொன்ற ‘விலங்கு நேயர்கள்’ பரவலாக இருக்கிறார்கள். ‘இது தலித் மக்கள் போட்டியிட வேண்டிய தொகுதி’ என்று தேர்தல் ஆணையம் அறிவித்த ஒரு தொகுதியில் போட்டியிட முன்வந்ததால் வெட்டிக்கொல்லப் பட்ட ‘மேலவளவு’ முருகேசனும் தமிழன்தான். கும்பகோணம் அருகே அரசு பணத்தில் கட்டப்பட்ட பாலத்தின் வழியாக பிணமாகக்கூட தலித் போக முடியாது. சரி, மதம் மாறினால் சாதிய அவமானம் போய்விடும் என்று நம்பினால், கிறிஸ்துவ நாடார், கிறிஸ்துவ முதலியார் என்று அங்கேயும் தன் கூரிய பற்களைக் காட்டுகிறது சாதி. நாட்டுக்காக, மக்களுக்காக உழைத்த தலைவர்களையும் சாதி விட்டுவைக்கவில்லையே சகோதரர்களே. காமராஜர், நாடாராகிவிட்டார்; பெரியார், நாயக்கராகி விட்டார்; வ.உ.சிதம்பரனார், பிள்ளையாகி விட்டார்; பாரதிதாசன், முதலியா ராகிவிட்டார். தேசத்துக்கு உழைத்த தலைவர்களை இதைவிட அவமானப் படுத்த முடியுமா?
இளைய தலைமுறை தான் இனி நம்பிக்கை!

சாதி என்கிற விஷத்தின் நீலம் நம் எல்லோருடைய உடலிலும், ரத்தத்திலும் கரைந்திருக்கிறது. தன்மீது அதிகாரம் செலுத்தும் எஜமானர் களிடமிருந்து விடுதலை பெறுவதைப் பற்றி சிந்திக்காமல், தனக்குக் கீழே இரண்டு தாழ்த்தப் பட்ட அடிமைகள் இருந் தால் போதும் என்று நினைக்கிற சாதிய மனோ பாவம்தான் தமிழகத்தின் முன்னேற்றத்துக்குத் தடை. வெளியே இருந்து யார் வேண்டுமானாலும் வரலாம், கொள்ளை அடிக்கலாம், கொடுமைப் படுத்தலாம். வெள்ளைக் காரர்களுக்கும், பிரெஞ்சுக்காரர்களுக்கும் ராஜமரியாதை தந்து அவர்களிடம் கைக்கட்டி சேவகம் பார்க்கத் தயாராக இருந்தது சாதி. ஆனால், அதே ஊரில் பிறந்து, வளர்ந்து, உழைக்கிறவனை கோயில் கதவுக்கு வெளியிலேயே நிற்க வேண்டும் என்று சட்டம் போட்டு நிறுத்தியது. இது இன்னும் தொடர வேண்டாமே!
வெள்ளையர்கள் நம்மை சாதியை வைத்து தான் ஜெயித்தார்கள். கொள்ளையர்கள் நம்மை சாதியை வைத்துதான் வென்றார்கள். இந்த இழிவுச் சரித்திரம் இனியும் வேண்டாமே.
ஒருவருக்கொருவர் எண்ணங்களால் முரண் படலாம். அது வளர்ச்சிக்கு வேர். ஆனால், எவரொருவர் மனதும் வர்ணங்களால் புண்பட வேண்டாமே!
வார்த்தை தவறி விழுந்தாலே, காயப்படுகிறது மனசு. வாழ்க்கைத் தவறி விழுகிற வேதனை இன்னும் வேண்டுமா? முதல் தலைமுறையாக படித்துவரும் இளைய தலைமுறை, வீட்டுக்கு வெளியே சாதியச் சட்டைகளை உரித்துப் போடுவதை வரவேற்கப் பழகுவோம். சாதி மறுப்புத் திருமணங்களை திருவிழாவாக நடத்துவோம். கல்வி, ஆட்சி, அதிகாரம், ஊடகம், கலை... என எல்லா மட்டங்களிலும் இளைய தலைமுறை தடைகளைத் தாண்டி வளரட்டும்.
நமது கல்வி முறையில் சாதி ஒழிப்புப் பற்றிய அக்கறையை கொண்டு வருவது மிக அவசியம். பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும், தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் இடையில் உள்ள வேறுபாடுகளை, சமத்துவமின்மையைக் களைவோம். சமூக நீதியை விரும்புகிற தோழமைச் சக்திகள் அதைச் சாதி ஒழிப்பில் இருந்தே தொடங்குவோம்.
‘கண் மூடிப் பழக்கமெல்லாம் மண் மூடிப் போகட்டும்.’ சாதி பேசாத, சாதி பார்க்காத, சாதி கேட்காத புதிய தலைமுறை நம் காலத்தில் தமிழகத்தில் சமத்துவமாக மலரட்டும்!

நன்றி விகடன்

No comments: